Saturday, June 21, 2014

...கற்க கசடற பகுதி 29






"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது."

ஒருவன் செய்யாமல், நாம் செய்யற உதவிக்கு இந்த வானமும் பூமியும் ஈடானது. சரியா புருஞ்சுதா, நாம அடுத்த குறளுக்கு போலாமா??

காமேஷ் பார்த்தான் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கும்பல் "செய்யாமல் செய்த.. செய்யாமல் செய்த.. செய்யாமல் செய்த... செய்யாமல் செய்த உதவி.." வகுப்பில் அடுத்து நடுக்கும் விளைவை உணர்ந்து வேலையை தொடங்கியிருந்தது. காமேஷ் அவர்களை விந்தையாய் பார்த்துக் கொண்டே வகுப்பை கவனிப்பது மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு தன் கனவின் கன்டிநியுவேஷனை தொடர்ந்தான்.


"காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."

வள்ளுவர் இங்க மறுபடியும் அதே தான் சொல்றாரு காலம் பார்த்து செஞ்ச உதவி இந்த பூமிய விட பெருசு. சரியா..?! அடுத்து..

சுரேஷ் எந்திருச்சு படி பாப்பம். அதிமேதாவி சுரேஷ் புத்தகத்தை மூடி வைத்து விட்டு பார்க்காமலேயே ஒப்பிக்க, சபாஷ் சூப்பர் அதுக்குள்ள மனப்பாடம் பண்ணிட்டயா!!?

"நேத்தே படுச்சுட்டேன் சார்..!"

காமேஷுக்கு கொஞ்சம் வயிறு கலக்கியது.

பசங்களா, பாத்தீங்களா இது மாதிரி தான் இருக்கணும். திருக்குறள் எல்லாம் ரொம்ப சுலபமா மனப்பாடம் பண்ணிடலாம். வள்ளுவர் ஒரே விஷயத்த தான் திரும்ப திரும்ப சொல்லுவார். நான் வந்து சொல்லித் தந்து உங்க நேரத்த வீணடிக்கனும்ன்னு அவசியம் இல்ல.!

'என்னது வள்ளுவர் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவாரா?' என்று காமேஷ் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்,

"எந் நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்; உய்வு இல்லை,
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."

"எந்த நன்றியை மறந்தவர்க்கும் வாழ்க்கையில மன்னிப்பு உண்டு ஆனா செய்நன்றி மறந்தவனுக்கு மட்டும் மன்னிப்பு கிடையாது. சரியா! புருஞ்சுதா? " என்று பத்தாவது குறளை முடித்த தமிழ் ஐயா, "மணி இப்ப 1:50 இன்னும் டென் மினிட்ஸ் டைம் தரேன். படுச்சுட்டு அப்புறம் டெஸ்ட்! சீக்கிரம், சீக்கிரம்!." என்று சொல்ல, அவர் வேகத்தில் வகுப்பே பரபரப்பானது.

காமேஷுக்கு தலையிலிருந்து கால் வரை தலை கீழாய் சுற்றியது. காமேஷ் கணக்குப் போட்டான், க்ளாஸ் ஆரம்பிச்சது 1:40, பத்து நிமிஷத்துல திருக்குறளுக்கு விளக்கவுரை முடுஞ்சு பத்து நிமிஷத்துல டேஸ்ட்டா?, இது மேகி நூட்டில்ச விட வேகமால்ல இருக்கு? நெஞ்சு பதறி கைகள் உதற, செய்யாமல் செய்த.. செய்யாமல் செய்த.. செய்.." காமேஷ் முதல் குறளுக்கே நெஞ்சைக் குத்தி முக்கிக் கொண்டிருக்க,

அதி மேதாவி சுரேஷ் பக்கத்தில் இருந்த மாணவர்களை எல்லாம் திருப்பாச்சி விஜய் மாதிரி தள்ளிக் கொண்டு அவசரமாய் எழுந்தான், "சார். நான் டெஸ்ட் எழுதவா..?".

'உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
"வள்ளுவன்!!" வகுத்ததடா..!
கர்ணா...!! வருவதை எதிர்கொள்டா.....!'

ரீ ரெக்கார்டிங்கில் சிவாஜியின் முகம் ஒரு முறை காமேஷுக்கு வந்து போக, "க்ளாஸ்..! இன்னும் பைவ் மினிட்ஸ் தான் இருக்கு. சுரேஷ் நீ வெளிய போய் உட்கார்ந்து எழுது." தமிழ் அய்யா தீவிரமானார்.

அந்த ஐந்து நிமிடத்தில் வகுப்பறையின் ஒவ்வொரு இருக்கையாய் காலியாக,

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்..

காமேஷ் மூன்றாவது குறளில் முக்கிக் கொண்டே சுற்றிப் பார்த்தான் வகுப்பே காலியாய் இருந்தது. அவனையும் சேர்த்து கடைசி பெஞ்சில் ரெண்டு பேர் இருந்தனர். கடைசி பெஞ்ச் பையனைப் பார்த்து, 'எத்தன என்று செய்கை காட்டினான்..?' அவன் ஏழு என்று சொல்வதற்குள், தமிழ் அய்யாவின் மூங்கில் தடி வேகமாய் வந்து விழுந்தது காமேஷின் மேசையில்.

"என்ன அங்க அரட்ட? எந்திரி எந்திரி..! புக்க மூடு.. பேப்பர் எடுத்துட்டு வெளிய வா."

அகிலால் சிரிப்பை அடக்க முடியவில்லை."சிரி தம்பி. சிரி. உன்ன அந்த மாதிரி நிலைமைல விட்டா  என்ன பன்னுவேன்னு தெரியும்". அது வரைக்கும் கதை சொல்லிக் கொண்டிருந்த காமேஷ் கொஞ்சம் சீரியசானான்.

"மச்சி கோச்சுக்காத." அகில் சிரிப்பை அடக்கி, "அப்புறம்?" கேட்க,

"அப்புறம் என்ன பயன் தூக்கார்.. வரைக்கும் தான் திருக்குறள் அதுக்கு அப்புறம் அண்ணனோட சொந்த குரல் தான்..!"

அகிலும், அர்ஜுனும் உருண்டு சிரிக்க, "மச்சி இப்ப நெனச்சா கொஞ்சம் சிரிப்பாத் தான் இருக்கு, ஆனா அன்னைக்கு விழுந்துச்சு பாரு மச்சி அடி.. அது தான் மரண அடி..! அந்த சுரேஷெல்லாம் வெச்சு மண்டையில கொட்ட வெச்சான் மச்சி அந்த ஆளு."

"அந்த தமிழ் வாத்தி ஸ்டைலே அப்படித் தான் மச்சி மொத பத்து நிமிஷம் பாடம் நடத்துவான், அடுத்த பத்து நிமிஷம் படிக்கணும், அடுத்த பத்து நிமிஷம் பருச்ச எழுதணும், கடைசி பத்து நிமிஷம் குனியவெச்சு கும்முவான். நாப்பது நிமிஷக் க்ளாஸ் சரியாப் போச்சு."

"அடடா.. அற்புதம் மச்சி.. ஹார்வர்ட் யுனிவர்சிட்டில கூட இப்படி ஒரு டைம் மேனேஜ்மன்ட் சிஸ்ட்டம் கிடையாது. இவனை எல்லாம் எவன் மச்சி வேலைக்கு எடுக்கறது" அர்ஜுன் கோபமாக,

"மச்சி அந்த மேன்மை பொருந்திய தமிழ் ஆசான் வேற யாரும் இல்ல, போன வருசம் தமிழ்ல ஸ்டேட் பர்ஸ்ட் வாங்குன பொண்ணு இந்த வெற்றிக்கு காரணம் எங்க தமிழ் அய்யா தான்னு பொட்டு வெச்சு பொங்கல் வெச்சுதே அதே தெய்வத் திருமகன் தான்." காமேஷ் முடிக்க, அதிர்ச்சியில் உறைந்தனர் இருவரும்.

"நாங்கள் கூர் செய்ய
 பள்ளிகளுக்கு
 கோடரிகளைத் தான் அனுப்பி வைத்தோம் - அவை
 குண்டூசிகளாய் திரும்பி வந்தன.."

கவிஞர் மேத்தாவின் கவிதை அகிலுக்கு நினைவுக்கு வத்தது.

"மேக்ஸ் லிருந்து, பையாலஜி, பிசிகிஸ், கெமிஸ்ட்டிரி வரைக்கும் அந்த ஸ்கூல்ல பாடம் நடத்தறதுங்கறதோட அர்த்தம் மனப்பாடம் செய்ய வைக்கறது. இப்படி தான் மச்சி நம்ம ஊர்ல முக்காவாசி டாக்ட்டர், என்ஜிநியருங்க உருவாகிக்கிட்டு இருக்காங்க" காமேஷ் பெரு மூச்சு விட்டான்.

"மச்சி கல்விங்கறது சுய சிந்தனை, படைப்பாற்றல், ஆளுமை, தன்னம்பிக்கை, உடல், மன வலிமை எல்லாம் சேர்த்தது தான். அது எல்லாத்தையும் விட்டுடுட்டு மனப்பாடம் மட்டும் தான் கல்வினு மாத்தி வெச்ருக்கற கன்றாவியான கல்வி முறை நம்ம நாட்ல மட்டும் தான். இங்க தான் சிங்கம், புலி, யானை, குரங்கு எல்லாத்துக்கும் பொதுவா மரம் ஏறறா போட்டி வெச்சு ஜெய்ச்சவுங்க யாருன்னு சொல்ற முட்டாள் தனமான சிஸ்ட்டத்த கட்டிக்கிட்டு இன்னும் அழறோம்." அகில்

"ஆனா ஒன்னு மச்சி அந்த ஸ்கூல் மட்டும் இல்லன்னு வை என்னோட உண்மையான பேஷன் என்னது னு எனக்கே தெருஞ்சிருக்காது. ஒரு வகையில அதுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும்." காமேஷ் சொல்ல,

"அது எப்படி மச்சி?" ஆச்சர்யமாய் அகிலும், அர்ஜுனும்.

தொடரும்..!









No comments:

Post a Comment