"மச்சி அந்த கரஸ்பாண்டன்ட் அடிக்கடி சொல்வாரு, 'நான் செத்துட்டா அன்னைக்கு கூட ஸ்கூல் லீவு விட கூடாது. கிளாஸ் எடுக்கணும்..டெஸ்ட் நடக்கணும்' னு" காமேஷ் சிரித்துக் கொண்டே சொன்னான்.
அர்ஜுன் அதிர்ந்து போனான், "மச்சி அவரு கடம உணர்ச்சிய நான் கண்டிப்பா பாராட்டுறேன்.. ஆனா இந்தியன் ஆர்மில கூட இப்படி ஒரு ஸ்ட்ரிக்ட் ரூல் இருக்காதே மச்சி..! பசங்களை எல்லாம் அவரு அப்படி படிக்க வெச்சா இந்நேரம் வீட்டுக்கு வீடு ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ், மூலைக்கு மூல ஒரு எடிசன், தெருவுக்குத் தெரு ஒரு ஐன்ஸ்டீன் இல்ல இந்த நாட்ல வந்திருக்கணும். ஆனா நம்ம இன்னும் கொசு பேட் டெக்னாலஜிய கூட சைனால இருந்து தான பிச்ச எடுக்கறம்?" இது தான் அர்ஜுன். அவன் சர்வ சாதாரணமாய் கேட்கும் கேள்விகளில் கூட சர்வதேசப் பிரச்சினை இருக்கும்.
காமேஷ் அமோதித்துக் கொண்டே சொன்னான், "வாரத்தில சண்டே ஒரு மணிலிருந்து நாலு மணி வரைக்கும் தான் ப்ரீ. மத்த நேரத்துல அப்பா, அம்மா பாக்க வந்தா கூட வாட்ச் மேன் திட்டி அனுப்பி விட்டுருவான்."அகிலும், அர்ஜுனும் நம்பாமல் பார்த்தனர்.
"மச்சி நாட்ல பல ஸ்கூல் இப்படி தான் இருக்குது. அதெல்லாம் ஸ்கூல் இல்ல மார்க் வாங்கற மெஷின் செய்யற பேக்டரி. டிஸ்கவரி சேனல் மெகா பேக்டரிஸ்ல கூட போடலாம். தெனம் காலைல அஞ்சு மணிக்கு எந்திருச்சா பல்லு வெளக்கரமோ இல்லையோ, படிக்க உட்கார்ந்துடனும்.காலைல அஞ்சு மணிலிருந்து ராத்திரி பதினோரு மணி வரைக்கும் போதி தர்மர் மாதிரி புக்கோட புக்கா உட்கார்ந்து தியானம் பண்ண வேண்டியது தான்." காமேஷ் சொல்ல,
அகில் சட்டென ஞாபகம் வந்தவனாய் கேட்டான். "மச்சி அந்த ஸ்கூலுக்கு நன்றி சொல்லனும்னு சொன்னியே..?"
"எல்லாம் நியூட்டன் தேர்ட் லா தான் மச்சி. அங்க பாட புக்க தவிர வேற புக் படிக்கிறதோ, பாட்டு கேட்கிறதோ, சினிமா கினிமா பார்க்கிறதோ சிரச் சேதம் செய்யற அளவுக்கான குற்றம். மருந்துக்கு கூட பொழுது போக்கு இருந்துடக் கூடாது. ஆப்கானிஸ்த்தான்ல தாலிபான் தீவிரவாதிய ட்ரைன் பண்ற மாதிரி பண்ணுவானுக." காமேஷ் சொல்ல அவர்களுக்கு அந்த உண்மையின் ஆழம் புரிந்தது.
"ஆனா நம்ம கிட்ட எப்பவும் ஒரு பத்து சினிமா பாட்டு புக்காவுது இருக்கும். அப்பப்ப குமுதம், விகடன் எல்லாம் ரொடேஷன்ல வரும்.அதுவும் இல்லாம லீவுக்கு போனா, அப்பாவுக்குத் தெரியாம நாலு அஞ்சு படம் பாத்துட்டு, ஸ்கூல் பசங்களுக்கு நாம தான் ஸ்டோரி டெல்லர். அகில், எஸ்.ரா ஒரு நல்ல கதை சொல்லின்னு சொல்லுவியே அந்த ஸ்கூல பொறுத்த வரைக்கும் நான் தான் அந்த கதை சொல்லி. க்ரூப் டிஸ்கஷன்னு கூடி உட்கார்ந்து 'தீனா' படக் கதை சொல்லிருக்கேன்.பல நேரம் படத்த விட நீ கதை சொல்றது நல்லா இருக்கும்னு எப்பவும் நாலு பேரு பின்னாடியே சுத்துவாணுக..!"
"அப்படி தான் மச்சி அன்னைக்கு பையாலஜி மாஸ்ட்டர் வாசுதேவன் படிக்கச் சொன்னான். நாங்க க்ரூப் டிஸ்கஷன்னு உட்கார்ந்து ஊர்ல போன வாரம் பாத்த 'மம்மி' படக் கதைய சொல்லிட்டு இருந்தேன்." அகிலும், அர்ஜுனும் நிகழ் காலத்திலிருந்து வழுக்கி காமேஷோடு அந்த மம்மி டிஸ்கஷனில் நுழைந்தனர்.
"ஒரு லோ எல்லோ லைட்டிங்.. மெழுகுவர்த்தி வெளிச்சம்.. பெரிய ரூம்.. பாத்ரூமுக்குள்ள ஹீரோயின் பாடிகிட்டே குளிக்கிற சப்தம். வெளிய பயங்கற மழை, காத்து.. அவுங்க இருக்கிற அந்த பாழடஞ்ச அரண்மனைய டாப் ஆங்கில் ட்ராலி ஷாட்ல ஸ்கோர் பண்ணுனா, ஒவ்வொரு மெழுகுவர்த்தியா காத்துல அனஞ்சிட்டே வருது. டக் னு ஹீரோயின் ரூம் கிட்ட வந்த ஒடனே கேமரா ஸ்டாப்.. பேக் ரௌன்ட் மியுசிக் இல்ல.. அமைதி.. கேமரா டாப் ஆங்கில்ல அங்கயே ஒரு செக்கண்ட் நிக்குது.
அடுத்த ஷாட் உள்ள. ஹீரோயின் பாடிகிட்டே துண்ட கட்டிட்டு பாத்ரூம் விட்டு வெளிய வருது.. 'சக்.. சக்...' 'சக்... சக்.' வெளிய கதவு லாக் ஓபன் பண்ற சத்தம்..
ஹீரோயின் 'who is that?' பதில் இல்ல.. இப்ப கோபமும் பயமும் கலந்து 'who the hell is that?' பதில் இல்ல..! இப்ப வேகமா 'சக்... சக்... சக்... சக். சக்..'
ஹிரோயின் பயந்து போய் பக்கத்தில இருக்க பைபிள்ல எடுக்கப் பாக்கறா.. டக்குனு ரூம்லிருந்த ஒத்த மெழுகுவர்த்தி அனஞ்சிடுது. இருட்டு.
பயத்துல தட்டு தடுமாறி டேப்பிள்ல இருக்க லைட்டர பத்த வெச்சு கதவ பாக்கரா, 'டங்..!' மணி ஒன்னு அடிக்குது.
அந்த இருட்டுல உத்து பாக்கறா கீ ஹோல் வழியா மண்ணு கொட்டுது. "வீல்.." னு ஒரு அலறல்..! ஹீரோயின் கீழ விழ கையிலிருந்த லைட்டர் எங்கையோ தவறி விழ, ஓரு மூணு செக்கண்ட் மறுபடியும் புல் டார்க். டக்குனு பி.ஜி வந்து, மறுபடியும் லைட் வருது.. பாத்தா.."
"பாத்தா..?" பையாலஜி மாஸ்ட்டர் வாசுதேவன் மூங்கில் தடியை உருட்டிக் கொண்டு பின்னாலிருந்து கேட்டார். மம்மி பட ஹீரியினை விட அதிகமாய் காமேஷுக்கு இப்போது குலை நடுங்கியது. கதை சொல்லும் ஆர்வத்தில், பையாலஜி மாஸ்ட்டர் அவ்வளவு பக்கத்தில் வந்ததை காமேஷ் கவனிக்கவில்லை.
காமேஷ் ஸ்டைலில், கட் பண்ணி ஓபன் பண்ணுனா அடுத்த ஷாட்.
"ஏன்டா.. அடுத்த வாரம் மிட் டேர்ம் டெஸ்டுக்கு படிக்க சொல்லி ப்ரீ பீரியட் விட்டா.. சினிமா கதையா சொல்ற சினிமா கதை.. எந்திரிடா.." பையாலஜி பிடில் வாசிக்கத் தொடங்கினார்.!
"பெத்தவங்க உன்னையெல்லாம் டாக்டர் ஆவே, எஞ்சினியர் ஆவேன்னு இங்க கொண்டு வந்து விட்டா.. சினிமா..! சினிமா..!"
'பட்.. பட்..டப்.. டப்..'
"ஐயோ.. சார்.. சார்.."
"சினிமா பத்தி பேசி வாழ்க்கைல உருப்படாம போவ ஜாக்கிரத..!"
"தட். தட். தட்!"
"சாரி சார்.. சாரி சார்..வலிக்குது சார்.."
"ஊம்.. வலிக்குதா? வலிக்குதா? பட்.. பட் ..பட்.. பட்.."
"ஆமா சார்.. ஆமா சார்.. இனிமே பேசமாட்டேன் சார்..!"
" ஊம்..அந்த பயம் இருக்கட்டும் மனசுல.. இனிமே எங்கயாவுது சினிமா கத பேசறத பாத்தேன்..'பட்' " பாட்ஷா ரஜினி மாதிரி அவர் முடிக்க,
அப்பா..! இன்னைக்கு இத்தோட உடுக்க பூஜை முடுஞ்சிது டா சாமி என்று பெரு மூச்சு விட்ட காமேஷுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
"ஏய்..! இரு..! போன டெஸ்ட்ல நீ எத்தினி மார்க் வாங்குன..?"
இதுக்குப் பேரு தான் 'போக விட்டு பொற மண்டைல அடிக்கறதா..?' என்று காமேஷ் நினைப்பதற்குள்,
"எடு எடு டெஸ்ட் நோட் எடு..!"
காமேஷ் பையைத் துழாவ பக்கத்தில் வந்து நின்று கொண்டார் பையாலஜி மாஸ்டர்.
காமேஷ் எதையோ மூடி மறைத்து தேட, பையை எட்டிப் பார்த்த, பையாலஜி மாஸ்ட்டர் சட்டென "ஏய்.. பைய இப்படி குடு..!"
"சார்.. சார்..!" காமேஷ் கொடுக்கத் தயங்க, அவர் வேகமாக பிடுங்கி இழுக்க, பையின் சிப் மொத்தமாய் திறக்க, உள்ளே மறைத்து வைக்கப் பட்டிருந்த அத்தனை சினிமா பாட்டு புத்தகங்களும் சரிந்து விழுந்தன.. கடைசியாய் அந்த வார ரொடேஷனலிருந்த ஆனந்த விகடனோடு. அட்டைப் படத்தில் த்ரிஷா சிலீவ் லெஸ் டீ சர்ட்டில், ஒரு மினி ஸ்கேர்ட் போட்டுக் கொண்டு கவர்ச்சியாய் சிரித்த படி!
"என்னது இது..! நீயெல்லாம ஸ்கூலுக்கு படிக்க வந்தியா இல்ல பொறுக்க வந்தியா..? மத்த படிக்கிற பசங்களையும் கெடுக்க வந்திருக்கு பாரு தருதல..!உன்னையெல்லாம்.. கரஸ்பாண்டன்ட் கிட்ட சொல்லி விட்டாத் தான் திருந்துவ.. எந்திருச்சு வாடா.." வர மறுத்த காமேஷை தர தர வென இழுத்துப் போனார் கரஸ்பாண்டன்ட் ரூம் நோக்கி வாசுதேவன்.
"மச்சி.. கட் பண்ணி ஓபன் பண்ணுனா.." அகில் கண்ணடித்து சொல்ல,
"உங்.." காமேஷ் எதோ சொல்லி இருக்கக் கூடம். அகில் சிரித்தான்.
"ஆனந்த விகடன்ல த்ரிஷா மினி ஸ்கர்ட் போட்டுக்கிட்டு நின்னதுக்கு நான் என்ன மச்சி பண்ண முடியும்.. ஏதோ 'அந்த' மாதிரி புக்கு வெச்சிருந்த ரேஞ்சுக்கு கரஸ்பாண்டண்டும், பையாலஜியும் பின்னி பெடல் எடுத்துட்டாணுக. சத்தியமா நான் அன்னைக்கு விகடன் வெச்சிருந்தது, பி.சி.ஸ்ரீராம் மாடர்ன் சினிமாட்டோகிராபி பத்தி ஒரு இண்டர்வியு குடுத்திருந்தாரு.. அத படிக்கத் தான். அட்ட படத்த கரச்பாண்டண்டும், பையலஜியும் திருப்பித் திருப்பி பாத்த அளவுக்கு கூட நான் பாக்கல .." காமேஷ் சொல்ல,
அகிலால் நம்ப முடியவில்லை. ஆனால் அது தான் காமேஷ். அவன் எந்த நாளும், எந்த நடிகையையும் அரை செக்கண்டுக்கு மேல் பார்த்ததில்லை. 'ஒரு ஹீரோயினோட அழகு எதுல தெரியுமா இருக்கு, அந்த டைரக்டர் சொல்ற கதைல இருக்கு.. அந்த கேரக்டரோட பலத்துல இருக்கு, அந்த கேமராமேன் காட்ற ஆங்கில்ல இருக்கு, மத்தபடி நம்மூர்ல முக்காவாசி ஹீரொயினுக டம் பியுடீஸ் தான்.' சினிமாவில் ஒரு நடிகை அழகின் அர்த்தத்தை திருத்தி எழுதியவன் காமேஷ்.
"அன்னைக்கு முழுக்க, கரஸ்பாண்டண்ட் ரூம் எதிர்ல முட்டி போட வெச்சு, லஞ்ச் கூட சாப்பிட விடாம, வர போற வாத்திகள் எல்லாம் கும்மி, மிஸ்செல்லாம் திட்டி, ஸ்கூல் மொத்தமா என் மானத்த வாங்கிட்டனுக மச்சி..ஆனா அன்னைக்கு தான் முடிவு செஞ்சேன் சினிமாவுல ஒரு படமாவுது டைரக்ட் பண்ணி ஹிட் அடுச்சதுக்கு அப்புறம் அதே எடத்துல போய் அந்த கரஸ்பாண்டண்டையும், பையாலஜி சாரையும் பாக்கனும்னு..!" காமேஷ் சொல்ல அசந்து போனார்கள் அகிலும் அர்ஜுனும்.
"கிளாஸ் நேரத்துல விகடன் படுச்சா தப்பு.. ஆனா ஹாஸ்ட்டல வார்டன் நாங்க ஸ்கூல் போன அப்புறம் பெட்டிய தெறந்து செக் பண்ணுவான். ஒரு பதினோராங் கிளாஸ் படிக்கிற பையனுக்கு பிரைவசியே இருக்காது. அதுக்கு பயந்து ஸ்கூல் பேக்கல வெச்சது தப்பா?
காலைல அஞ்சு மணிலிருந்து அடுத்த வாரம் வரப் போற மிட் டெர்ம்முக்கு படி, படி னு மொக்க போடறப்ப, ஒரு அரை மணி நேரம் எனக்கு பிடிச்சத பண்றது தப்பா?
படிப்பு, கல்விங்கற பேருல எனக்கு சுத்தமா ஆர்வமில்லாத பையாலஜயையும், பிசிக்சையும் மல்லாக்க போட்டு, வாய தெறந்து திணிக்கும் போது, எனக்கு ஆர்வமா இருக்கிற சினிமாவ பத்தி நான் அப்பப்ப தெருஞ்சுகிறது தப்பா?
மனுசனுக்கு இருக்கிற எல்லா ஆர்வத்தையும் படிப்புங்கற பேருல அடுச்சு நொறுக்கிட்டு, மார்க் வாங்கணும், டாக்டர் ஆகணும்னு, எஞ்சினியர் ஆகணும்னு சொல்றப்ப எனக்கு ஆர்வம் இருக்கிற விஷயத்தில அறிவ வளர்த்துகிறது தப்பா?
வெறும்.. வெறும் மார்க்குக்காக பையாலஜயையும், பிசிக்சையும், கெமிச்டிரியையும் படிக்கறத விட, கத்துக்குற நிஜமான ஆர்வத்துல பி.சி.ஸ்ரீராம் சினிமட்டோகிரபிய படிக்கிறது தப்பில்லன்னு தான் எனக்கு தோணுது மச்சி." காமேஷ் அவ்வளவு சீரியசாய் பேசி இருவரும் இது நாள் வரை பார்த்ததில்லை.
வாயடைத்துப் போய் பார்த்தார்கள்.
தொடரும்..

No comments:
Post a Comment