மறுநாள் உணவு இடைவேளையின் போது கம்பியூட்டர் சைன்ஸ் டிபார்மண்ட் நண்பனிடமிருந்து அகிலுக்கு வந்தது அந்த குறுஞ் செய்தி.
'Machi Santhosh died in Hospital today Morning. Let us all pray for his soul to rest in peace!' படித்தவுடன் அகிலுக்கு ஒரு நிமிடம் மூச்சு நின்றது. கைகள் உதற குப் பென வியர்த்தது.
"மச்சி?" அகில் அதிர்ந்து போய் அர்ஜுனைப் பார்க்க, அர்ஜுனும் மொபைலைப் பார்த்து அதே அதிர்ச்சியில்.
'செமஸ்ட்டர்ல அரியராம். பிலேசமன்ட்ல உட்கார முடியாது. வேல கெடைக்காதுன்னு நெருப்பு பத்த வெச்சுக்குட்டானாம்.'
'அப்பா அம்மாவுக்கு ஒரே பையனாம். இப்ப அவுங்களுக்கு யாரு ஆறுதல் சொல்றது. பாவம் பா. '
'மத்த பசங்க மாதிரி ஊர் சுத்தறது, சினிமாவுக்கு போறது, கிளாஸ் கட் அடிக்கிறதுன்னு ஒன்னும் பண்ண மாட்டானாம். தனியா உட்கார்ந்து படுச்சுட்டே இருந்தாலும் எக்சாம்ல சுமாராத் தான் மார்க் வாங்குவானாம். அதனால ரொம்ப இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வேற.!'
அரசல் புரசலாய் செய்திகள் கல்லூரி எங்கும்.
'ஹூம் என்ன புள்ளைங்களோ? பருட்சைல பைல் ஆனதுக்கெல்லாம் சூசைட் பண்ணிக்கிட்டு.'
அகில் யோசித்தான். 'SSLC, +2 தேர்வுகளில் நல்ல மார்க் வாங்க தங்கள் பிள்ளைகளை ஹிட்லரின் கான்சன்ட்றேச்சன் கேம்ப் மாதிரி இருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பும் இதே சமூகம் - விளையாட்டு, உடற்பயிற்சி, சமூக சிந்தனை, பொது அறிவு, தன்னம்பிக்கை, நட்பு, நேசம் என்பதை எல்லாம் தூரக் கடாசி விட்டு பரிட்ச்சை, போட்டி, மார்க் என்பதை மட்டுமே மாணவர்களிடம் முன்னிலைப் படுத்தும் இதே சமூகம் - தேர்வில் தோற்றுப் போனவனுக்கும், வெற்றி பெற்றவனுக்கும் சாதிப் பிரிவைக் காட்டிலும் மிகப் பெரிய பிரிவை ஏற்படுத்தும் இதே சமூகம் இன்று மனிதாபிமான முகமூடி போட்டுக் கொண்டு உச்சுக் கொட்டியது.
கறுப்புக் கொடி குத்தி, மௌன அஞ்சலி செலுத்தி, சோகம் சொட்டப் பேசி, கல்லூரி தன் சம்பரதாயங்களை முடித்து மறந்து போன பிறகும் அகிலுக்கு இதயம் வலித்தது.
'நம் வாழ்வின் இருப்பத்தி ஐந்து ஆண்டுகளை விழுங்கி விட்டு, வெறும் புத்தகப் புழுவாய் மாற்றி விட்டு, ஒரு சொட்டுத் தன்னம்பிக்கையை கூடத் தர முடியாத இந்த கல்வி முறை இருந்தால் என்ன எரிந்தால் என்ன?' வைரமுத்துவின் கம்பீரமான குரல் அகில் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
"மச்சி வெள்ளைக்காரன் நம்மள குமாஸ்த்தாவாக்க டிசைன் பண்ணிக் குடுத்த அடிமைக் கல்வி தான இது. அப்புறம் எப்படி வரும் நீ சொல்ற ஒரு சொட்டுத் தன்னம்பிக்க." அர்ஜுன்.
"கரக்ட் தான் மச்சி எங்கயோ படுச்சேன், நம்ம கல்வி முறை நல்ல தொழிலாளர்களை உருவாக்குகிறது. முதலாளிகளை அல்ல." அகில்.
"பிடிச்சத படிக்க விட்டாத் தான மச்சி முதலாளி வருவான். பொழப்புக்கு படுச்சா தொழிலாளி தான் வருவான்." காமேஷ் சொல்ல இருவரும் ஆமோதித்தனர்.
"மச்சி யுரோப்பியன் எஜுக்கேஷன் ஸ்ட்டேன்டர்டையும், அமெரிக்கன் எஜுக்கேஷன் ஸ்ட்டேன்டர்டையும் பாக்கணும் நீ..! அவுங்க கல்வில ஒரு சுதந்திரம் இருக்கும், பிடிச்சத படிக்க சமூகத்துல ஒரு வாய்ப்பு இருக்கும். அது டெக்னிக்கல் அறிவோட பெர்சனல் ஸ்கில்லையும் சேர்த்து
வளர்க்கும். நம்ம படிப்புல சென்ட்டம் வாங்கற ஒரு பையன், தான் படுச்சத ஒரு குரூப் முன்னாடி நின்னு பயமில்லாம தெளிவா எக்ஸ்ப்ளைன் பண்ண முடியுமா? நமக்கும் வைவா செமினார்ங்கறது காலேஜ்ல ஒரு சம்ப்ரதாயம். அவனுக்கு அது சிலபஸ்" என்று அர்ஜுன் சொன்னதை அகில் இன்று கண்முன்னே பார்க்கிறான்.
மெல்பர்னில் ஆறாம் வகுப்பு படிக்கும் அகில் நண்பரின் மகளுக்கு வகுப்பில் ஒரு போட்டியாம்.தேர்தல் அறிக்கை தயாரித்து, பிராச்சாரம் செய்து, கூட்டத்தில் உரை நிகழ்த்தி, தன் கட்சியை மாணவர்களிடம் வெற்றி பெற வைக்க வேண்டுமாம்.அதற்காக ஓட்டு போடுவதில் தொடங்கி, முடிவுகள் சொல்வது வரை அத்தனையும் நிஜ அரசியலை பிரதிபலிக்கிறது போட்டி. அதில் இப்படி இருக்கிறது அந்த பெண்ணின் தேர்தல் அறிக்கை,
*) நான் வெற்றி பெற்றால் விளையாட்டு வகுப்புகளை வாரத்திற்கு ஐந்திலிருந்து ஆறாக்குவேன்.
*) வாரத்திற்கு ஒரு முறை ஒரு சினிமா வகுப்பையும், கதை வகுப்பையும் கொண்டு வருவேன்.
*) எல்லா வகுப்புகளிலும் பத்து நிமிடம் கேள்வி நேரம் ஒதுக்கச் செய்வேன்.
என்று போகும் அந்த அறிக்கை அச்சிடப் பட்டு ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு சாக்லேட்டோடு கொடுக்கப் படுகிறது.
அகில் ஆனந்தத்தில் இதை அவன் அப்பாவிடம் ஒருநாள் சொல்ல, அவன் அப்பா சொன்னார் அப்படி இங்க நடந்தா வருமானத்துக்கு அதிகமா சாக்லேட் வாங்குனதா சொல்லி 'அம்மா' அவுங்க வீட்டுக்கு எப்பவோ ரைட் விட்டுருப்பாங்க.
விமான நிலையத்தில் அகில் சிரித்துக் கொண்டே, டைரியில் தான் எழுதிய கவிதையை வாசித்தான்.
புலிகளையெல்லாம்
கூட்டமாய் பிடித்து
பொதி சுமக்க வைக்கிறது!
இந்த கல்வி முறை
சிங்கங்களை சிறையில் அடைத்து
சிட்டுக் குருவி மாதிரி
கத்தப் பழக்குகிறது!
பாக்கட் பால் சமூகத்திடம்
பசுமாட்டைப் பற்றி
கட்டுரை எழுதச் சொல்கிறது
இந்த கல்வி முறை
படிப்பை திணிக்கும் பதற்றத்தில்
பிஞ்சுகளின் பட்டாம் பூச்சிக் கனவுகளில்
பெட்ரோல் ஊற்றி விடுகிறது!
தன்னம்பிக்கையற்ற
தக்கைகளை உருவாக்கி
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பார்சல் அனுப்புகிறது!
இந்த கல்வி முறை
எழுதப் படிக்கத் தெரிந்த
பாமரர்களுக்கு
பட்டை தீட்டி
வைரமென விற்கிறது.!
நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணைக் காட்டி
வருகிற பள்ளிகளின் விளம்பரம்
நூறு சதவிகித பிலேஸ்மான்ட்டைக் காட்டி
வருகிற கல்லுரி விளம்பரம்
எல்லாம்..
செக்கிழுக்க இங்கே எருதுகள் செய்து தரப்படும்
என்பதன் முகமூடிகள் தானே!
வகுப்பறை தாண்டி
வாசிக்காத சமூகம்!
பாட புத்தகம் தாண்டி
சிந்திக்காத சமூகம்!
வரலாறுகளை
வெறும் தேதிகளாய்..
பூகோளத்தை நாட்டின்
தலை நகரங்களாய் மட்டும்
மனப்பாடம் செய்த சமூகம்!
கேல்குலஸ் கணக்குகளை
எதற்குப் படித்தோம்
என்று-ஒரு
பொறியாளனே
புரிந்து கொள்ள முடியாத சமூகம்!
பத்து மார்க் கேள்விக்காக
பிக் பேங்கைப் படித்த சமூகம்!
கலித்தொகை தொடங்கி
கலிங்கத்து பரணி வரைக்கும்
ராபர்ட் ப்ராஸ்ட் தொடங்கி
வில்லியம் வேர்ட்ஸ்வர்த் வரைக்கும் படித்தாலும்
தப்பின்றிப் பேசத்
தடுமாறுகிற சமூகம்!
அடடா பட்டியலிட்டால்
அடங்காது இந்த கல்வி முறையின் சாதனைகள்.!
வெறும் வார்த்தகளால்
விளக்க முடியாத வேதனைகள்!
அகில் வாசித்து முடிக்க, இந்த கல்வி முறையின் மதிப்பீடுகளை, கேலிகளை, கிண்டல்களை, அவமானங்களை பொறுத்துக் கொண்டு தான் விருப்பப்பட்ட பயணத்திற்கு தானே பாதை அமைத்து நடந்து கொண்டிருக்கும் காமேஷின் ஞாபகம் வந்தது.
தொடரும்..!

No comments:
Post a Comment