தனியே அமர்ந்து பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் சட்டென எழுந்து, எதிரில் இருந்த டேபிள் மேல் தடுக்கி விழுந்து, அவசரமாய் வெளியேறினான்.
அகில் வேகமாய் பின் தொடர்ந்தான்.
"மச்சி.. நெஜமாவா சொல்ற.?" அகில் அதிர்ச்சியில்.
"ஊம். மாப்பிள்ளை சிட்னி..!" அர்ஜுன் விட்ட பெரு மூச்சில் ஒரு வரலாற்றுச் சோகம் வடிந்தது.
"சாரி மச்சி" அர்ஜுன் தோள்களை ஆதரவாய் அணைத்தான் அகில்.
"எல்லாம் தெருஞ்ச விஷயம் தான.விடு மச்சி. " மூளை சொன்ன அந்த வார்த்தைகளை அர்ஜுன் இதயம் கண்ணீரால் நிராகரித்தது.
அன்று மாலை அர்ஜுன், இளையாராஜாவின் திருவாசக போதையில், விவேகானந்தரை வாசித்துக் கொண்டிருக்க, அகில் டைரியில் கிறுக்கினான்.
விடச் சொல்கிறது இதழ்கள்
விடாமல் வலிக்கிறது இதயம்!
விளையாடுகிறது வாழ்க்கை
விடை தேடுகிறது நம்பிக்கை!
நாம் கட்டிய கனவுக்
கோட்டைகளை எல்லாம்
இடித்துத் தள்ளி விட்டு
குடியிருக்க மட்டும்
குடில்கள் செய்து தருகிறது-
காலம்..
நேற்று,
ரணங்களை ஏற்படுத்திவிட்டு
மருந்து பூச
நாளைகளை அனுப்புகிறது!
நாளை
மருந்துகளை பூசி விட்டு
மறுபடியும் காயப்படுத்த
மறுநாளை முடுக்கி விடுகிறது!!
"ச்சா.. ஹ!! அடடா..!" கவிதைக்காக தனக்கே சபாஷ் போட்டுக் கொண்ட அகில், அதை அர்ஜுனிடம் காட்ட ஒரு நொடி யோசித்தான். வீடு பற்றி எரியும் போது நெருப்பைப் பற்றிக் கவிதை எழுதி அதை சொந்தக்காரனிடம் காட்டும் மடத்தனம் போல இருந்ததால் மெதுவாக மூடி வைக்க,
"மச்சி..!" அர்ஜுன் அழைத்தான். "எங்கூட ப்ரௌசிங் சென்ட்டர் வர முடியுமா?" காரணம் கேட்காமல் அகில் கிளம்பினான்.
"ஒன்னுமில்ல மச்சி. சும்மா இந்த போட்டவ காட்டணும்னு தோனுச்சு. அதான்." என்று அவன் பேஸ்புக்கைத் திறந்தான்.
நந்தினி சிவப்புப் பட்டுப் புடவையில் சிரித்தபடி நின்றிருந்தாள். Nandhini and ___________ got engaged என்ற வாசகத்தோடு. "மாப்பிள்ள ஸ்மார்ட்டாத் தான் இருக்கான் இல்ல." சட்டென மாப்பிளை பெயரை சொடுக்கிய அர்ஜுன், FRACS, Sydney என்பதில் மட்டும் வெகுநேரம் கர்சர் வைத்து, டாக்டர் மச்சி, என்றபடி வேகமாய், facebook Settings சென்று யோசிக்காமல் Delete My Account கிளிக் செய்து எழுந்தான். "தல வலிக்குது. நான் கிளம்பறன் டா"
"நான் கிளம்பறன் டா" கோலாலம்பூர் விமான நிலையத்தில் யோசித்துக் கொண்டிருந்த அகிலை அர்ஜுனின் வார்த்தைகள் ஸ்கைப்பில் கிள்ளியது. "டேய். லூசு என்ன இப்பவே யோசனை சென்னைல வந்து யோசி, யோசிக்க நிறைய இருக்கு எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு. நான் வரேன் சென்னைல பாப்பம், ஓகேவா பை..!" அர்ஜுன் கை அசைக்க, அகில் சிரித்தான், "ஆம் சென்னையில் வந்து யோசிக்க நிறையவே தான் இருக்கிறது"
அகில் விமானத்துக்கு இன்னும் ஆறு மணி நேரம் இருந்தது. கணினியை மடித்து உள்ளே வைத்து. கண்களை மூடினான்.
"மச்சி. இந்த செம் ஆள் கிளியர் பண்ணுனா தான் ப்ளேஸ்மெண்ட் உட்கார முடியும்."
"எனக்கு எஜுக்கேஷன் லோன் ரிபேமென்ட் கோர்ஸ் முடிஞ்ச ஒடனே ஆர்ம்பிச்சுடும். தம்பி வேற +12 முடிக்கறான்."
"இந்த Switchgear and Protection ராஜி மேம், அன்னைக்கு நான் க்ளாஸ்ல தூங்கினதிலிருந்து என் மேல செம கான்டுல இருக்காங்க!"
என்று அர்ஜுனுக்கு பல்வேறு தரப்பட்ட வருத்தங்கள். இப்போதெல்லாம் அர்ஜுன் நந்தினியைப் பற்றி அவ்வளவு கவலைப் படுவதில்லை. இருந்தும், எப்போதாவது ECE படிக்கும் கண்மணியை எதேற்சயாய் பார்க்கும் போது, "மச்சி நந்தினி மாதிரியே இல்ல" என்று தன்னை மறந்து பார்த்து, மறுகணமே, "ராமகிருஷ்ணர் அடிகடி சொல்ற மாதிரி அழகு ஆபத்தானது மச்சி. பொண்ணுகள மட்டும் நம்பிறாத." என்பான்.
"டேய் உனக்கு தான் ஒரு லவ் புட்டுக்குச்சு சாமியார் ஆயிட்ட. நான் இன்னும் ஒரு பிகர கூட கரக்ட் பண்ணலையேடா. என்ன ஏன் சாவடிக்கிற?" என்று அகில் மனதுக்குள் சலித்துக் கொண்டாலும் வெளியே சொல்வதில்லை.
"வாழ்க்கைல அண்மீகம், மெய்ஞானம், தேடல்ங்கற இன்பத்துக்கு முன்னாடி பொண்ணுக தர இன்பம் எல்லாம் கால் தூசி மச்சி."
'பயபுள்ள கடைசி வரைக்கும் என்ன காலேஜ் டைட்டானிக் பாயிண்ட்ல ஒண்டிக் கட்டையாவே நிக்க விட்டுட்டானே!' விமான நிலையத்தில் கண்கள் மூடியிருந்த அகிலுக்கு சிரிப்பு வந்தது.
"மச்சி...!! ஹே..! ஆல் கிளியர்.!" ஐந்தாம் செமஸ்ட்டரில் வெற்றிகரமான ஆல் கிளியர் ரிசல்ட்டைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் ஓடி வந்தான் அர்ஜுன்.
"ஏய்..! சூப்பர் மச்சி அப்படிப் போடு..!" தானும் எப்படியோ அடித்துப் பிடித்து இருந்த ஒற்றை அரியரை கிளியர் பண்ணி விட்டதால் ரெட்டிப்பு மகிழ்ச்சியில் அகில்.
"Switchgear and Protection centum மச்சி. ராஜி மேம் இன்டர்னல்ஸ் புல் மார்க் போட்டுருக்காங்க..!"
"நான் அப்பவே சொல்லல அவுங்க ரொம்ப நல்ல மேம் டா.!" அகில் கை கொடுத்தான்.
காமேஷ் "மூணு மச்சி" என்று கொஞ்சம் சலிப்போடு வர, "அப்பவே ஜோசியக் காரன் சொல்லிட்டான் எனக்கு சனிதிசை நடக்குதாம். தொட்ட எதுவும் வெளங்காதாம். அடுத்த வருஷம் சனி முடியும் போது தான் அமோகமா குடுக்குமாம்." என்று புலம்பிக் கொண்டே வெளியே வந்தார்.. வேற யாரு நம்ம சென்னிமலை மச்சான் தான்.
"அது இருக்கட்டும் சென்னிமல எத்தன?" சிரித்தான் காமேஷ்.
"நாலு மச்சி.அடுத்த செம் கும்பகோணம் போயிட்டு வந்தா ஆல் கிளியர் பண்ணிடுவேன்னு ஜோசியக்காரன் சொல்லிருக்கான்." சென்னிமலை சீரியசாக,
"கும்பகோணம் போகாத மச்சி. கிளாசுக்கு ஒழுங்கா போ.." அகில் சொல்ல, முதல் முறையாய் பலத்த சிரிப்பொலியோடு அகிலின் பெரியார் ஆதரிக்கப்பட்டார்.
அகில் சிரித்துக் கொண்டே பின்னே நகர, ரிசல்ட் பார்த்துவிட்டு ரொம்பவும் சீரியசாய் வந்த யாரோ ஒருவன் காலை மிதித்து தடுக்கி விழுந்தான். "ஓ சாரி" அகில் சொல்வதைக் கூட கேட்காமல் அவன் வேகமாய் நடக்க, "ப்ச் விடு விடு" காமேஷ் செய்கை காட்டினனான்.
அகிலும் மறந்து தான் விட்டான் மறுபடி அவன் முகத்தை பார்க்கும் வரை!
அவர்கள் ஆந்திரா மெஸில் உட்கார்ந்திருக்க, மாஸ்ட்டர் பிரியாணி போட்டிருந்தார். அரியர் மாமியாரிடமிருந்து விடுபட்ட அகிலுக்கும், அர்ஜுனுக்கும் வாழ்க்கை கொஞ்சம் இன்பமயமாக மாறிவிட்ட மாதிரி இருந்தது.
பிரியாணிக்கு காத்து அவர்கள் உட்கார்ந்திருக்க, மெஸ்சுக்கு பக்கத்திலிருந்த வீட்டின் அறையில் இருந்து திடீரென்று ஒரு அலறல்.கதவுகள் உடைக்கப்படும் சத்தம். இங்கும் அங்கும் சிலர் ஓடினர். கூட்டம் கூடியது. பதற்றம் பற்றியது அந்த தெருவை.
அவர்கள் அவசரமாய் வெளியே வர, புகை மண்டலத்துக்கு நடுவே யாரோ ஒருவனை நாலு பேர் வெளியே இழுத்து தூக்கி கொண்டு ஓடுவது தெரிந்தது. வேகமாய் பக்கத்தில் ஓடிப் போய் பார்க்க, அகில் மூளைக்குள் சட்டென ஏதோ ஒரு நினைவு முடிச்சு அவிழ்ந்து, தன்னை அறியாமல் கைகள் நடுங்கி கண்கள் இருண்டது. காமேஷின் கரங்களை அழுத்தமாய் இருக்கினான்.
பாதி வேந்து, சதை உருகிப் போய் வெள்ளையும், சிவப்புமாய் அலங்கோலாமாய் விவரிக்க வார்த்தையின்றி இருந்த அந்த முகம், அவன் காலை மிதித்த அதே முகம். "ம.. ம.. மச்சி.." அகிலுக்கு இப்போது உடம்பெல்லாம் நடுங்க, "உங்க ப்ரெண்டா பா?" தூக்கிக் கொண்டு ஓடிய பெரியவர் பதற்றமாய் விசாரித்தார், அகிலுக்கு எந்த வார்த்தையும் வரவில்லை. சற்று முன்பே பார்த்திருந்தாலும் அவனைப் பற்றி எந்த விபரமும் தெரியாதது அகிலுக்கு இதயத்தை என்னமோ செய்தது.
"யோவ் ஆம்புலன்ச கூப்பிட்டாச்சா?",
"அட.. தள்ளுங்கப்பா, அந்த பென்ச்ச எடு படுக்க வை,", "மெதுவா, மெதுவா."
"யாரா கூடப் படிக்கிற பசங்க இருகீங்களாப்பா?"
அதற்குள் அங்கு கூட்டம் கூடி விட, "ஏய் நம்ம சந்தோஷ் டா.! C.S.E Department!"
தொடரும்..

No comments:
Post a Comment