அகில் ஸ்கைப்பில் அழைத்தான், அர்ஜுன் கொஞ்சம் கூச்சத்தோடு இங்கும், அங்கும் பார்த்துக் கொண்டே வீடியோ சாட்டில் ஹாய் சொல்ல,
"என்ன மச்சி பக்கத்துல எதா வெள்ளக்கார பிகர் இருக்கா என்ன? இப்படி வெக்கப்படற..?" அகில் சீண்டினான்,
"அடிங்க.. மொக்க போடாத.. சென்னிமலைக்கு என்ன..?" அர்ஜுன்
"அது ஒன்னும் இல்ல மச்சி, ஏசுநாதர் சிலுவையில பேசின கடைசி ஏழு வார்த்தையும் தமிழாம். பேஸ்புக்ல ஷேர் பண்ணிருக்காரு சென்னிமல.! இத உலகத்துக்குத் தெரியப் படுத்தணுமாம் ..!"
சீரியசாகத் தலை அசைத்த அர்ஜுன், "இந்த விஷயத்த மொதல்ல அவருக்குத் தெரியப்படுத்த சொல்லு!"
அகில் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த சீனாக்காரன் திடுக்கிட்டு விழித்து முறைக்க, அகில் சிரிப்புச் சத்தத்தைக் கஷ்ட்டப்பட்டுக் குறைத்தான்.
"நீ ஒரு லூசு மச்சி.. எதுக்குப் பேஸ் புக் அக்கௌன்ட் டிஆக்டிவேட் பண்ணுன.. இது மாதிரி காமெடியெல்லாம் மிஸ் பண்ற போ..!" அகில்.
ஒரு காலத்தில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து அகிலை பேஸ்புக்கில் இணைத்த அர்ஜுன், இன்று பேஸ்புக் அக்கௌண்ட்டை மொத்தமாய் மூடிவிட்டான்.
"யாரு நானா லூசு, ஒரு பைவ் மினிட்ஸ் பேஸ்புக்ல இருந்து ஒதுங்கி, பேஸ்புக் உலகத்த பாரு. சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ், பெரியாரெல்லாம் தாடிய சேவ் பண்ணிக்கிற அளவுக்கு நம்ம பயலுக போடற ஸ்டேடசும், புத்தர், ஏசுவெல்லாம் புல்லட் ப்ரூப் ஜேக்கட் போட்டுக்கற அளவுக்கு ஷேர் பண்ற போஸ்ட்டும், அடுத்த நிமிஷமே 'நயன்தாரா பேன் க்ளப்' பேஜுக்கு நைசா போய் வழியற ஜொள்ளும்.." என்று அர்ஜுன் தொடங்க,
மவுண்ட் ரோட் பாஸ்ட் புட் கடையைப் பார்த்து நம்மாழ்வார் பேசுவது மாதிரி இருந்தது அகிலுக்கு.
"அய்யோ மச்சி.. கூல் டௌன்! ஒரு பேச்சுக்கு பேஸ்புக் ஏன் க்ளோஸ் பண்ணுனே கேட்டேன். அதுக்கு ஏன் இவ்வளவு டென்சன் ஆகற. " அகில் சிரிக்க,
"நான் ஏன் க்ளோஸ் பண்ணுனேன்னு உனக்குத் தெரியாதா..?"அர்ஜுன் கேட்டான் .
ஆம் அகிலுக்குத் தெரியும் தான்.அகில் யோசித்தான்.
அன்று போனை உடைத்து, கிதாரை விட்டெரிந்து விட்டு அறைக்குள் சென்ற அர்ஜுன் அடுத்த ஒரு வாரம் யாரோடும் சரியாகப் பேசவில்லை. 'ப்ளீஸ் மச்சி..எதுவும் கேட்காதீங்க. என்ன கொஞ்சம் ப்ரியா விடுங்க..' என்றவனிடம் யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.
அர்ஜுன் தனியாய் நின்று கொண்டு வெற்றுப் பார்வை பார்ப்பதையும், சில நேரம் அழுவதையும் கூட அகில் பார்த்தான். அகில் பேச்சுக் கொடுக்கும் போதெல்லாம் "ப்ளீஸ் மச்சான். உன் வேலய மட்டும் பாரு" அர்ஜுன் கொடுத்த பதிலில் அகில் ஒதுங்கி விட்டான். விவேகானந்தர் புத்தகங்களோடு மட்டுமே நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
மூன்று அரியர், அப்பாவின் திட்டு, நந்தினியிடம் சண்டை அர்ஜுன் ரொம்பவே கலங்கிப் போய் இருந்தான். ஏதோ விபரீதம் என்று மட்டும் அகில் உணர்ந்திருந்தான். ஆனால் விபரீதத்தின் வீரியம் புரிந்தது ஒரு நாள் மொட்டை மாடியில், "Finally its all over machi" என்று அர்ஜுன் சிரித்துக் கொண்டே சொன்ன பொழுதில் தான்.
"டேய் என்ன டா?" அகில் பதற்றமானான். அர்ஜுன் பெரு மூச்சு விட்டு யோசித்தான்.
"ஹாய்.. நந்தினி சொல்லு.." குரலை முடிந்த மட்டும் இயல்பாக வைத்துக் கொண்டவன். "நானே போன் பண்ணணும்னு இருந்தேன். ரிசல்ட் வந்துருச்சு."
"ஊம்.." எந்த உணர்ச்சி இன்றி வந்த மறுமுனைக் குரல் அவனைக் கொஞ்சம் பயப்படுத்தியது.
நந்தினி தனக்கு முன் எப்படியும் ரிசல்ட் பார்த்திருப்பாள் என்று தெரிந்து, "பார்த்தியா நான் சொன்னேன் இல்ல தெர்மல் எஞ்சினியரிங் Centum வரும்னு." அந்தப் பதற்றத்திலும், V.அர்ஜுனின் ரிசல்ட்டை பார்த்து விட்டே வந்திருந்தான் அர்ஜுன்.
"பாத்தேன்.. அப்படியே ஒரு மூணு அரியர் கிளியர் பண்ணாம உட்கார்ந்திருக்கியே அதையும் பாத்தேன்" நந்தினி சொல்ல, அர்ஜுனுக்குள் நடந்த தெர்மல் இன்ஜினியரிங்கில் சூடானது உடல்.
"நந்தினி..?" வார்த்தை தடுமாறியது.
"ஒன்னும் சொல்லாத. என்ன ஏமாத்துன வரைக்கும் போதும். இன்னும் என்ன சொல்லப் போற..?" நந்தினி கோபமாக, அர்ஜுன் மௌனமானான்.
வழக்கம் போல நந்தினி தொடங்கிவிட்டாள். தெலுங்குப் படத்தை மலையாள டப்பிங்கில் பார்ப்பது மாதிரி, தன் அப்பாவின் வார்த்தைகளை நந்தினியின் குரலில் கேட்க தலை வலிக்கத் தொடங்கியது அர்ஜுனுக்கு.
ஒரு எல்லைக்கு மேல் பொறுக்க முடியாத அர்ஜுன், தன் கோபத்தையும், தலைவலியையும் முடிந்த வரை பொறுத்துக் கொண்டு, ரொம்பவும் அமைதியாய்ச் சொன்னான், "நந்தினி நான் தான் அப்பவே சொல்லிருக்கனே ஒவ்வொரு ப்ரைனும் ஒவ்வொரு மாதிரி. எனக்கு இந்த மெடிசன், எஞ்சினீரிங்னு படிக்கற டெக்னிக்கல் ப்ரைன் இல்ல. ஆர்ட்ஸ் படிக்கிற க்ரியேடிவ் ப்ரைன். நான் மட்டும் மியூசிக்ல போயிருந்தா.." என்று அர்ஜுன் சொல்லி முடிப்பதற்குள், கோபமான நந்தினி கத்தினாள்,
"அர்ஜுன் சும்மா எங்கிட்டயே உன் கத விடாத. எல்லாம் ப்ரைனும் ஒரே ப்ரைன் தான். ஒழுங்கா உட்காந்து படிக்காம, ஊர சுத்திட்டு, வெட்டியா அரட்ட அடுச்சுட்டு, ப்ரைன கொற சொல்லாத. பெரிய மியூசிக்கல் ப்ரைன்? அத வெச்சு என்ன பண்றது? எங்க அப்பா சொன்னது சரி தான். உங்கூட இருந்தா பிச்ச கூட....!" என்று நந்தினி எதோ சொல்ல வர,
"ஏய் வாய மூடு.!" ஆவேசமாய்க் கத்தினான் அர்ஜுன். அப்படி ஒரு கோபத்தை அர்ஜுனிடமிருந்து நந்தினி கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாள் . "ஆமா நான் பிச்ச எடுக்கிற பரதேசி தான். எங்கூட சேந்தா நீயும் பிச்ச தான் எடுக்கனும். இதுக்கு மேல வேணும்னு உன் டென்ட்டல் காலேஜ்ல எவன் கூடவாவுது போயிடு. உங்க அப்பன் அதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டான். ரொம்பச் சந்தோஷப்படுவான். இப்ப அவன் சொல்லி தான இவ்வளவு சீன் கிரியேட் பண்ற.." அர்ஜுன் கத்த,
நந்தினி ஆத்திரத்தோடு,"ஷட் அப் அர்ஜுன். திஸ் ஈஸ் தி லிமிட். மரியாதையா போன வெச்சுடு." சட்டெனக் காலைக் கட் பண்ண, கோபத்தின் உச்சத்தில் இருந்த அர்ஜுன், "மூடிகிட்டு போடி" வேகமாய் விட்டெறிந்தான் மொபைலை. சில்லு சில்லாய் நொறுங்கியது செல்போன். கோபத்தில் ஆவேசமாய் எடுத்தான் கிதாரை, மேசை முனையில் பட்டு அறுந்தது கம்பி, அந்த வெறியிலும் கிதாரை மெதுவாய் கீழே வைத்து வேகமாய்த் தள்ளினான்.
"டேய்.. என்னடா சொல்ற? நெஜமா.. நீயா அப்படிப் பேசுன..?" அகிலால் நம்ப முடியவில்லை.
அர்ஜுன் வெற்றுப் பார்வை அகிலை கோபப்படுத்தியது.
"போடா லூசு. போன் பண்ணி சாரி கேளு.!" அர்ஜுன் போனைத் தட்டி விட்டான்.
"வேண்டாம் மச்சி. இப்ப தான் எல்லாம் சரியா நடக்கிற மாதிரி இருக்கு. விட்டுரு.." அர்ஜுனின் மாறிய மனநிலை அகிலை கலவரப் படுத்தியது. எனினும் ஏதோ கோபத்தில் பேசுகிறான் என்று தான் அகில் நினத்தான். கிட்டத்தட்ட அர்ஜுனும் அப்போது கோபத்தில் தான் பேசிக் கொண்டிருந்தான்.
"நாளைக்கு ஊருக்கு போற இல்ல. நந்தினிய நேர்ல பார்த்து பேசு. எல்லாம் சரியாயிடம்" அகில் சமாதனப்படுத்தி வழி அனுப்பி வைக்க, இரண்டு நாட்கள் கழித்து, "மச்சி உங்கிட்ட கொஞ்சம் பேசலாமா? ப்ரியா இருக்கியா?" ஊரிலிருந்து அர்ஜுன் போனில் பதற்றமாய் கேட்டான்.
அகில் லேசான நடுக்கத்தோடு, "ஊம் சொல்லு" போனை எடுத்துக் கொண்டு அவசரமாய் வீட்டை விட்டு வெளியே வர, அர்ஜுன் லேசாய் சிரித்தான். அர்ஜுனின் சிரிப்பு அவன் அழுகையை விட அதிகமாய் பயபடுத்த, "ஏய் லூசு என்ன ஆச்சு?"
"வாழ்க்கைப் பாதையில் இது ஒரு புது மாற்றம்..!" அகில் வரிகளைஅர்ஜுன் பாட, "டேய் கிறுக்குப்..... என்னடா ஆச்சு?" அகிலால் கோபத்தை அடக்க முடியவில்லை.
நந்தினியை பல முறை அழைத்தும் விடை இல்லாததால், வீட்டுக்கே போன அர்ஜுனை நந்தினியின் அப்பா வெளியே தள்ளி பெரிய பிரச்சனை ஏற்படுத்தியதையும், அர்ஜுனின் அப்பாவிடம் தன் மகளை ஈவ் டீசிங் செய்கிறான் என்ற அளவுக்கு அவர் கேவலமாய் சொன்னதையும் அர்ஜுன் தயங்கி தயங்கி சொல்ல, அகிலின் கைகள் வியர்த்திருந்தது.
"மச்சி..!?" ஆறுதல் சொல்ல வார்த்தை தேடினான் அகில்.
"ஆனா பொண்ணுக இருக்காங்களே.. தே ரியலி வாண்ட் டு ப்ளே வெரி சேப் மச்சி..!" அகில் யோசித்தான் "அடக் கடவுளே இவனுமா?"
"அவுங்க அப்பா என்னை அவ்வளவு திட்டறாரு ஒரு வார்த்த பேசாம அழுதிட்டு நிக்கறா மச்சி." அர்ஜுன் பெரு மூச்சு விட்டு தொடர்ந்தான், " ஆனா உண்மையான அன்புன்னா அது நம்ம அப்பா அம்மாகிட்ட தான் கெடைக்கும்னு அப்ப தான் மச்சி புருஞ்சுகிட்டேன், அந்த ஆள் ஆத்திரத்துல என்னை அடிக்க வந்தப்ப, யோவ் என் பையன அடிக்க நீ யாருய்யா என் வீட்ட விட்டு மொத வெளிய போன்னு எங்க அப்பா சொன்னாரு பாரு.." மௌனம் நிறைத்து அவர்கள் உரையாடலை. அர்ஜுன் தேம்பினான்.
"வாழ்க்கைப் பாதையில் இது ஒரு புது மாற்றம்.." ஊரிலிருந்து திரும்பிய வந்த இரண்டு நாட்களில் நூறாவுது முறையாக அதே பாடலை வாசிக்கிறான் அர்ஜுன் மொட்டை மாடியில்.
"டேய் மச்சி. ப்ரியா விடு டா.." அகில் சமதானமாகச் சொல்ல,
தன் மொபைலில் எண்களை மின்னல் வேகத்தில் தட்டினான் அர்ஜுன். எண்கள் அழிந்து தேய்ந்து போன அந்த மொபைல் பட்டன் சொன்னது அவன் தேய்ந்து போன காதல் சோகத்தை.
"ஹும்ம்.. நம்பர் மாத்திட்டா மச்சி.." அர்ஜுன் கண்களை இருக்க மூடினான்.
"அர்ஜுன் உனக்கும் எனக்கும் செட் ஆகாது. இத இத்தோட விட்டுரு. நல்லா படி. அரியர் கிளியர் பண்ணி உனக்கு நல்ல வேல கெடச்சா அது தான் எனக்கு சந்தோசம்.." ஆர்த்தி மொபைலுக்கு அழைத்த அர்ஜுனிடம் நந்தினி பேசிய அந்த கடைசி வரிகளை நினைவுப் படுத்திக் கொண்டான். நந்தினி, அப்பா பெண்ணாக அவள் அப்பா சொன்னதை ஒரு வார்த்தை கூட மாறாமல் ஒப்பித்து விட்டாள்.
பெரு மூச்சு விட்டு எழுந்தான் அர்ஜுன். தன் விவேகானந்தர் புத்தகத்தின் பக்கம் திருப்பினான்.
அன்றிலிருந்து அவன் தனிமையை நிறைத்தது கிதாரும், விவேகானந்தர் புத்தகமும்.
வாழ்க்கை நகர்ந்தது. இன்பாக்ஸ் மெசேஜைப் போல அர்ஜுன் துயரத்தின் சோகத்தை அடுத்து வந்த நாட்கள் பின்னுக்குத் தள்ளின.
ஆனால் கொஞ்ச கொஞ்சமாக மாறத் தொடங்கி இருந்தான் அர்ஜுன். ஒரு நாள் அளவுக்கு அதிகமாய் சிரித்து அத்தனை பேரின் வயிறு வலிக்க வைக்கவும், மறுநாளே விட்டத்தைப் பார்த்து உட்கர்ந்து மௌனத்தில் கரையவும் ஊசலாடியது அவன மனம். பெண்கள் மேல் இருந்த அந்த வயதின் ஈர்ப்பை, அவனே நெருப்புக் கட்டையால் சுட்டுக் கொள்வதை அகிலால் உணர முடிந்தது.
ஒரு நாள் ப்ரௌசிங் செண்ட்டரில்அவர்கள் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்க, தனியே அமர்ந்து பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் சட்டென எழுந்து, எதிரில் இருந்த டேபிள் மேல் தடுக்கி விழுந்து, அவசரமாய் வெளியேறினான்.
அகில் வேகமாய் பின் தொடர்ந்தான்.
தொடரும்

No comments:
Post a Comment