Tuesday, April 1, 2014

...கற்க கசடற பகுதி 22




"மச்சி என்ன பாத்தா அவளுக்கு என்ன லூசு மாதிரி தெரியுதா?" கோபத்தில் கடுகடுத்திருந்தது அர்ஜுன் முகம்..

"??!!" 

"என்னால அவ அளவுக்கு படிக்க முடியாது தான் ஒத்துக்கறேன்ஆனா நான் ஒன்னும் வெட்டிப் பரதேசி கெடையாது.!" உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது அர்ஜுனுக்கு..

'மச்சி.. அன்னைக்கு யோசிச்சிட்டு இருந்தமே நந்தினி அப்பா எதோ ப்ளான் பண்றாருனு. அது என்னனு தெருஞ்சிருச்சு. பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து வெட்டி அரட்ட அடிக்காத, டைம் வேஸ்ட் பண்ணாதசைக்கிள் டெஸ்ட்டுக்கு படிஇன்டர்னல்ல மார்க்கு என்னனு, வர வர நந்தினி மொக்க தாங்கல. அவுங்க அப்பா நான் வெட்டி பையன்னு நந்தினி கிட்டையும் ஏத்தி விட்டுருக்கார். அது தான் ஔவையார் பாட்டி மாதிரி அட்வைஸ் பண்றா..'  இரண்டு நாட்களுக்கு முன் சிரித்துக் கொண்டே அர்ஜுன் சொன்னது அகிலுக்கு நினைவுக்கு வர அர்ஜுனின் கோபம் ஒரு மாதிரி லேசாய் புரிந்தது. ஆனால் அது இவ்வளவு சீரியஸ் ஆகும் என்று அகில் அப்போது எதிர் பார்க்கவில்லை.

"மச்சி என்ன ஆச்சு.. ஏன் இவ்வளவு டென்சன்.." அகில் ஆறுதலாய் பார்க்க,

"டென்சனா.. மயிரு..! என்னமோ பெரிய இவ மாதிரி பேசுறா.." மார்ப்பில் கை வைத்து .கே 47 தோட்டவைப் போல் வந்த வார்த்தைகளை மட்டுப் படுத்திச் சொன்னான் அர்ஜுன், "டுவல்த் சரியா படிக்காம கோட்ட விட்டதுனால தான் இப்படி உருப்படாம எஞ்சினியரிங் படிக்கரனாம்.. இதுலையும் நேரத்த வேஸ்ட் பண்ணி வெட்டி அரட்ட அடுச்சா அப்புறம்.." துடித்தது இதழ்கள் அர்ஜுனுக்கு

அர்ஜுனின் ஈகோவை அளவுக்கு அதிகமாய் நந்தினி சீண்டி விட்டாள் என்பது புரிந்து, "மச்சி.. கூல் மச்சி.. எல்லாம் சரியாயிடும். சாதாரண விஷயம். இதுக்குப் போய்." சமாதானப் படுத்த முயன்றான் அகில்.

"என்ன மச்சி.. சாதாரண விஷயம்..? இவளுக்கு மெடிக்கல்ல இன்டிரெஸ்ட் அதனால படிக்கறா!! எனக்கு இன்டிரெஸ்ட் இருக்கறத எவன் மச்சி படிக்க விட்டான்.? எஞ்சினியரிங், மெடிசன் தவிர நாட்ல ஒரு மனுஷனுக்கு வேற எதுலையும் இன்டிரெஸ்ட் இருக்கவே கூடாதாபெருசா பேசுறானுக!" அர்ஜுன் கொதித்தான்.

"எல்லாம் அவங்க அப்பா சொல்லிருப்பாரு. நந்தினி அப்படி எல்லாம் சொல்ல மாட்டா மச்சி.." எதாவுது சொல்லி அவனை ஆறுதல் படுத்த முயன்றான் அகில்.ஆனால் அகில் சொன்ன  ஒவ்வொன்றும் ரிவர்ஸ் எஃபக்ட்டில் அர்ஜுன் கோபத்தை அதிகமாக்கியது.

"அவுங்க அப்பா சொன்னா இவ யோசிக்க வேண்டியது தான மச்சி  என்னப்  பாத்தா தெருவுல உருப்படாம சுத்தற பொருக்கி மாதிரி இருக்குதா என்ன? சும்மா லைப்ல வீணா போயிடுவ.. லைப்ல வீணா போயிடுவன்னு .. எனக்கு எஞ்சினியரிங் இண்டரஸ்ட் இல்ல தான்.. ஆனா அத படுச்சா தான் இந்த தரித்திரம் புடுச்ச நாட்ல சோறு னு தெரியும்.. யாரும் ஒன்னும் அட்வைஸ் பண்ண தேவையில்ல! ஏன் லைப்ப வீணா போகாம காப்பாத்திக்க எனக்குத் தெரியும்." 

அகிலுக்கு என்ன சொல்லவதென்று தெரியவில்லை. விழித்தான்

"மச்சி..!" என்று அகில் எதோ ஆரம்பிக்க, "கால் வந்தா எடுக்காத,மெசேஜ் வந்தாலும் தொடாத" என்று சொல்லி ஆவேசமாய் மொபைலை விட்டெரிந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான் அர்ஜுன்

அகில் பார்த்தான்.அது, அர்ஜுன் கிதாரைப் போலவே ரொம்பவும் நேசிக்கும் "Complete Works of Swami Vivekananda."

அகிலுக்கு ஏனோ வைரமுத்துவின் 'காதலித்துப் பார்' படிக்க வேண்டும் போல் இருந்தது..தேடிக் கண்டு பிடித்து 'இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல' புத்தகத்தைப் புரட்டி, வாசிக்க ஆரம்பித்தான்.

அகில் ஆர்வமாய் வாசித்துக் கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் ஏதோ சலசலப்பு கேட்டு புத்தகத்தில் இருந்து கண்களை விலக்கினான்அர்ஜுன் உட்கார்ந்திருந்தான் மொபைலை நோண்டிய படி..

"இருதயம் அடிக்கடி 
இடம் மாறி துடிக்கும்
நிசப்த அலை வரிசையில் 
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்..! 
காதலித்துப் பார்!"

மின்னலாய் பளிச்சிட்டது அகில் நினைவில் அந்த வரிகள்.. சிரித்தான்..

"இல்ல...! நம்ம பசங்க யாரா போன் பண்ணிருக்காங்களான்னு பாக்கறேன்..!" அர்ஜுன் முகத்தில் கூச்சமும், வெட்கமும் சரி விகிதத்தில் வழிந்தது.

"ஓஹோ..! நான் கூட விவேகானந்தருக்கு எஸ்.எம்.எஸ் பண்ணி டர்பன் எப்படி கட்டறதுன்னு  கேட்கரையோ நெனச்சேன்..!"அகில் சிரித்தான் கிண்டலாய்..

"அடிங்க.. உன்ன எவ்வளவு தடவ விவேகானந்தர வெச்சு கிண்டல் பண்ணாதன்னு சொல்லிருக்கேன்.. கோபம், வெறுப்பு, துக்கம் எது வந்தாலும் நான் நிம்மதிக்காக சரணாகதி ஆகற எடம் அது.. உனக்கு உன் கவித மாதிரி." அர்ஜுன் கொஞ்சம் கோபமாக

"சாரி மச்சி.. சும்மா தான் சொன்னேன் சரி அத விடு..! மொபைல ஏன் சும்மா மொறச்சு மொறச்சு பாத்துக்கிட்டே இருக்கபோன் தான் பண்றது.."  அகில் கேட்க

அர்ஜுன் வெறித்துப் பார்த்தான்

 அகிலுக்கு திடீரென சமாதான தேவதை மாதிரி சிறகு முளைத்து விட,"என்ன மச்சி.. நந்தினி தான் தெரியாம எதாவுது பேசுனானா அத போய் பெருசா எடுத்துக்கிட்டுஇப்படி இருந்தா அப்புறம் லைப் ரொம்ப கஷ்ட்டம் மச்சிமன்னிக்கப் பழகிக்கோ.. சரி நந்தினிய எதா திட்டினையா..?" 

அர்ஜுன் விழித்தான். அகிலுக்கு சங்கடமாய் இருந்தது..

"ஏன் மச்சி.." என்று அகில் எதோ சொல்ல வருவதற்குள், Nandhu Calling போன் சிணுங்கியது. "எடு எடு போன எடு .. கோபப் படாம பேசு." பக்குவமாய் சொல்லி பக்கத்தில் உட்கார்ந்தான்.

மறு முனையிலிருந்து இயல்பாய் ஒலித்த நந்தினியின் குரல் தெளிவாய் கேட்டது அகிலுக்கு, "ஏன் பேசிட்டு இருக்கும் போதே பாதில கட் பண்ணிட்ட?"

"இல்ல. சிக்னல் இல்ல.. கட் ஆயிடுச்சு..!" அகில் அர்ஜுனை உற்றுப் பார்க்க, பேசிக் கொண்டே அர்ஜுன் தலையை திருப்பிக் கொண்டான்

" ! நான் கூட கோவ்சுகிட்டயோன்னு  நெனச்சேன்..?" மறு முனை குரல்..

"சே.. சே.. இல்ல" என்று அர்ஜுன் சொல்லி விட்டு, அகிலைப் பார்க்க, அகில் ஏக கடுப்பில் இருந்தான். அர்ஜுன் மெல்ல நகர்ந்தான் அங்கிருந்து. அகிலுக்கு அவன் கழுத்தைப் பிடித்து உலுக்க வேண்டும் போல் இருந்தது.

"மச்சி.. பொண்ணுக கிட்ட வீரத்த காட்றவன் மனுஷனே இல்லன்னு  பெரியவங்க சொல்லிருக்காங்க இல்ல.. அது தான்.." நந்தினியை ஒரு வழியாக சமாளித்து விட்டு அகிலை சமாளிக்க வந்தான் அர்ஜுன்

"நீங்க வீரத்த ஒன்னும் காட்ட வேண்டாம். நந்தினி உன்ன காட்டு காட்டு னு காட்னப்ப எங்கிட்ட கேட்டதையாவுது கேட்கறது.." 

"மச்சி..அது " என்று அர்ஜுன் பொறுமையாய் எதோ சொல்ல வர

"அண்ணா, நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் னா.. கடைசில வடிவேல சமாதானப் படுத்தற சிங்க முத்து மாதிரி ஆக்கிட்ட இல்ல என்னசந்தோசம்" என்று அகில் சொல்லி சிரித்தான்

ஆனால் அன்றிலிருந்து, நந்தினியின் நச்சு அதிகமாக,அவளிடம் நேராக நிறுத்தச் சொல்ல முடியாத அர்ஜுன், சமாளிக்கவும், தப்பிக்கவும், சில நேரம் தவிர்க்கவும், பல நேரம் மறைக்கவும் தொடங்கினான்

அவன் தந்தையிடம் பேசும் அதே நாடகத் தன்மையாய், நந்தியிடமும் மாறிக் கொண்டிருந்தது அவன் பேச்சு..!

தியேட்டரில் நின்று கொண்டு, இன்டர்னல்ஸ்க்கு படிக்கிறேன் டிஸ்டர்ப் பண்ணாத என்றான்..

மொட்டை மாடியில் இளையராஜாவைப் பற்றி தீவிர அரட்டையில் இருக்கும் போது அழைப்பு வந்தால், ஸ்பெஷல் கிளாஸ்ல இருக்கேன்.. அப்புறம் கூப்படறேன் என்றான்.. 

ஸ்டடி ஹாலிடேசில் இரவெல்லாம் அரட்டை அடித்து, களைப்பில் காலை பதினோரு மணி வரைக்கும் தூங்கிக் கொண்டிருக்கும் போது கால் வந்தால், தலையை சிலுப்பி, தொண்டையை கனைத்துக் கொண்டு, ரொம்பவும் சப்த்தமாய் அஞ்சு மணியிலிருந்து படுசிட்டு இருக்கேன், என்று கத்தி, உறங்கும் மற்றவரையும் எழுப்பி விட்டு தொந்தரவு செய்தான்..!

ஆல் கிளியர் வித் 8 பாய்ண்ட் சம் திங் ஜி.பி. என்றே மெய்ன்டெய்ன் பண்ணி வந்தான் நந்தினியிடம் தன் மதிப்பெண் பட்டியலை!!

ரெஜிச்ட்டரில் தனக்கு அடுத்து இருந்த அதிமேதாவி  V.அர்ஜுனின் தேர்வு எண்ணைக் கொடுத்து விட்டு, இன்ஷியல் மாத்தி போட்டுடாங்க என்று சொல்லியே சஸ்டைன் பண்ணி வந்தான் தேர்வு முடிவுகளை

கொஞ்சம் விவேகனந்தர், கொஞ்சம் அகிலிடம் புலம்பல், அர்ஜுன் காதல் கொஞ்சம் சுகமாகத் தான் போய்க் கொண்டிருந்தது

நான்காம் செமஸ்ட்டர் ரிசல்ட் வரும் வரை.. 

நந்தினி ஆவலோடு சென்று அதை ப்ரோவ்சிங் சென்டரில் பார்க்கும் வரை..

"ஹே..!சூப்பர்  நாம சொன்ன மாதிரிஜி.பி. அப்படியே மெய்ன்டெய்ன் பண்றான்..ஆனா என்ன காலேஜோ? இன்னுமா இவன் இன்ஷியல மாத்தல?" என்று ஆனந்தமாய் அவள் எழுந்திருக்கும் வரை..

சட்டென எதோ நினைத்தவளாய் அர்ஜுன் கொடுத்த நம்பருக்கு முந்தைய நம்பரை கணினியில் அடித்து என்டர் தட்டிய வரை..!!

தொடரும்..

No comments:

Post a Comment