"அகில்.. உனக்கு ரிசல்ட் வந்துருச்சுன்னு ஷுரா தெரியுமா ? யாரு சொன்னது.?" அர்ஜுன்
" 'B' செக்க்ஷன் பசங்க தான் மச்சி சொன்னானுக.. சந்தோஷ் எஸ்.எம்.எஸ் பண்ணுனான்."
"அடச்சே! அவுனக ஒருத்தனுக.. இதெல்லாம் அவனுகளுக்கு மட்டும் எப்படி மொதல்ல தெரியுமோ..?" சலிப்பில் அர்ஜுன்.
"மச்சி.. எனக்கு அல்லு கிளம்புது மச்சி.. கண்ட்ரோல் சிஸ்ட்டம் தான் என்னாகும்னே தெரியல..?"அகில் புலம்பலுக்கு விடை இல்லை.
மௌனம் நிறைத்தது அவர்கள் பயணத்தை. வியர்த்து, நடுங்கும் கைகளை பாக்கட்டுக்குள் விட்டு, அவர்கள் அவசரமாய் நடக்க..
"காலேஜ் ப்ரொவ்சிங் சென்ட்டர் புல்லா இருக்கும்.. ஹைவே கிட்ட போலாம்.." காமேஷ் திசை திருப்பினான் அவர்கள் கால்களை.
"புள்ளையாரப்பா.. உன்னத் தான் நம்பி இருக்கேன்.. தயவு செஞ்சு எனக்கு அரியர் வராம பாத்துக்கோ." பயப் பதற்றத்தில் ஹைவே பிள்ளயார் கோவில் முன் அவசர அவசரமாய் செருப்புகளைக் கழற்றி விட்டு, நடுத் தெருவில் அசோக் தோப்புக்கரணம் போட,
"சென்னிமல.. ரிசல்ட் எல்லாம் ஏற்கனவே போட்டாச்சு.. இனி எந்த புள்ளையார் வந்தாலும் அத மாத்த முடியாது. வா போலாம்.." ஆனால் அகிலின் பெரியாரை அந்த நேரத்தில் யாரும் விரும்பவில்லை தான். காமேஷும், அர்ஜுனும் பக்தியோடு தாடையிலும், வாயிலும் ஒத்திக் கொண்டு நடந்தனர்.
கூட்டம் நிறைந்து வழிந்தது ஹைவே ப்ரொவ்சிங் சென்டரிலும்.
"மச்சி ரிசல்ட் ஷுரா வந்துருச்சு மச்சி.." கூட்டத்தைப் பார்த்து தானாக முனங்கினான் அகில்.
ஏழு மலையான் தரிசனம் போல நகர்ந்தது கியூ.
"தம்பி உன் நம்பர் சொல்லு பா.." கணினிக்கு முன் அமர்ந்தபடி,ஒவ்வொருவரையும் கேட்டு, ரிசல்ட் பார்த்துச் சொன்னார் ப்ரொவ்சிங் சென்ட்டர் அண்ணா.
"ஷ்.. ஷப்பா..!"
"எஸ்...சூப்பர்..!!"
"அடச்சே.."
"அய்யோ.. அய்யயோ."
"ஆண்டவா..!"
ரிசல்ட் பார்த்த வெவ்வேறு முகங்களின் பீதி கிளப்பும் வெவ்வேறு குரல் நிரம்பி வழிந்தது அந்த அறையில்.
"உன் நம்பர் என்னப்பா..?" கும்பல் நகர, அகிலுக்கு முன் நின்ற சென்னிமலையிடம் திரும்பினார் அவர்.
"1 0..1 0.. 1 0 5" லாக்கர் பாஸ் வேர்ட் சொன்னவுடன் எப்படியும் சுட்டுவிடுவான் என்பது தெரிந்து வில்லன் முன் நடுங்கும் துணை நடிகன் மாதிரி வாய் குளறியது அசோக்கிற்கு.
"ப்சே.. என்னப்பா ..?" என்று நம்பரைத் தட்டி அசோக்கை அவர் பாவமாய் பார்க்க, "அண்ணா" என்று பயந்து கொண்டே எட்டிப் பார்த்த அசோக்.. இரு நொடி மௌனத்திற்கு பிறகு.."அம்மா.....!" என்று தலையை பிடித்துக் கொண்டு மயங்கி விழுவது போல் பக்கத்தில் இருப்பவர்களைத் தள்ளிக் கொண்டு அப்படியே சாய்ந்தான்.
"அய்யோ.. என்ன ஆச்சு பா" பதறிப் போய் அவர் கை கொடுக்க, மற்றவர்களும் தாங்கிப் பிடிக்க, "ஒன்னும் இல்ல னா. சும்மா மயக்கம் வர மாதிரி.." என்றபடி நடுங்கும் கைகளுடன் அவன் பணத்தை நீட்ட, "இல்ல பா..இருக்கட்டும்.. பரவாயில்ல. வீட்டுக்கு பத்திரமா போ." அவர் பரிதாபத்தில் பணம் கூட வாங்காமல் விடையனுப்பினார்.
அந்த பதற்றத்திலும் அகிலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அடுத்ததாய், அகில் வெறித்துப் பார்த்தான் திரையை. அவன் நினைத்தது போலவே, கண்ட்ரோல் சிஸ்ட்டம் கிளீன் போல்ட் ஆகி இருந்தது.
"அடச்சே.." அகில் சற்றே வெறுத்தாலும் "ஷ்.. ஷப்பா எப்படியோ மத்ததெல்லாம் கிளியர் தான் " சமாதனம் அடைந்தது இன்னொரு மனம்.
மூச்சு நெருக்கும் அந்த குமப்லில், "மச்சி.. நீ பாத்துட்டு வா.. நான் வெளிய வெய்ட் பண்றேன்.." அகில் சொல்லி நகர, தலை கூட ஆட்டாமல் கணினிக்குப் பக்கத்தில் நின்றான் அர்ஜுன்.
1 0 5 0...., அர்ஜுனின் நம்பரை அவர் கணினியில் தட்ட, 'Nandhu Calling' சினுங்கியது அர்ஜுன் போன்..
"அடச்சே.. இவ ஒருத்தி நேரங் காலம் தெரியாம.." பத்தாவுது முறையாய் வந்த காலை துண்டித்தபடி, வியர்வை வழியும் முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான் அர்ஜுன்.
அர்ஜுன் ரொம்பவே கலங்கி இருக்க, "மச்சி..?" கேள்வியோடு பார்த்தான் அகில்
'மூனு' எரிச்சலில் சைகை காட்டினான்.
அகிலுக்கு இப்போது இன்னுமே நிம்மதியாக இருந்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் தங்கப் பதக்கம் சிவாஜி கணேசன் தடுமாறுவது மாதிரி லேசாய் தடுமாறி "அடச்சே.. என்ன மச்சி இப்படி ஆப்பு வெச்ட்டானுக ..?!" முடிந்த மட்டும் வருத்தமாய் வைத்துக் கொண்டான் முகத்தை.
"மச்சி.. ரீ வேல் அப்ளை பண்ண என்ன ப்ரோசிடர். இப்ப ஆபீஸ் தெரந்துருக்குமா..? போலாமா?" கைகளை உதறி அசோக் ஆவேசமாய் கேட்க,
"ஊம்ம்ம்ம்.." காமேஷ் கிண்டலாய் முறைத்தான்.
"நியுமெரிக்கல் மெத்தட்ஸ் சென்ட்டம் எதிர் பார்த்தேன் மச்சி.. ஆனா பெய்ல் பண்ணி வெச்சுருகானுக. நான் ரீவேல் அப்ளை பண்ணனும்.. மனசுல என்ன மச்சி நெனச்சுட்டு இருக்கானுக.." கோபத்தில் பக்கத்தில் பாதாள சாக்கடைக்கு பறித்த குழி இருப்பது கூட கவலையில்லாமல் குதித்துக் கொண்டிருந்தான் அசோக்.
கொஞ்சம் அவனை அங்கிருந்து நகர்த்தி சமாதனப் படுத்த முயன்றான் அகில்.
இருக்கற கடுப்புல இவன் வேற என்று எண்ணியபடியே தலையில் கை வைத்துக் கொண்டான் அர்ஜுன்.
தன்னை சில பேர் கவனிக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு அசோக்,"ஒருத்தனும் ஒழுங்கா திருத்திரதில்ல. நான் யுனிவர்சிட்டி எக்ஸாம் கவுன்சில் ல கேஸ் லாட்ஜ் பண்ணனும். என் பேப்பர் கரக்ட் பண்ணினது யாரு னு எப்படி மச்சி ட்ராக் பண்றது.." புலன் விசாரணை விஜயகாந்த் மாதிரி இன்வேஸ்டிகேஷனை தொடங்கினான்.
பொறுமையை இழந்து கொண்டிருந்த காமேஷ் சட்டென இடை மறித்து, "நியுமெரிக்கல் மெத்தட் மட்டும் தான் அரியரா மச்சி..?" கேட்க,
"இல்ல மச்சி இன்னும் நாலு பேப்பர் இருக்கு, அதுக்கும் ரீ வேல் அப்ளை பண்ணனும்.. ஆனா இது தான் மச்சி என்ன ரொம்ப டென்சன் ஆக்குது..! எப்படி போட்டாலும் கண்டிப்பா பார்டர்லயாவுது பாஸ் பண்ணிருவேன் மச்சி..!"அசோக் சொல்ல,
பத்து செகண்டில், செண்டம்,பார்டர் பாஸ் அளவுக்கு வந்ததை நினைத்து சிரிப்பை அடக்க முடியவில்லை காமேஷுக்கு.
"ரீ வேல் அப்ளை பண்ற காச எங்கிட்டயாச்சு குடு மச்சி.. பிற்காலத்துல படம் எடுத்தன்னா உனக்கு ஜனாதிபதி கையால கோல்ட் மெடல் குடுக்கிற மாதிரி ஒரு ஷாட் வெக்கறேன்." காமேஷ் சிரிக்க, ஹைபை தட்டினான் அகில். அர்ஜுன் லேசாய் சிரித்து விட்டு மறுபடியும் சோகமானான்.
"மச்சி..!!??" காமேஷ் அர்ஜுனின் தோளை ஆறுதலாய் பற்ற,
"ப்ச்..!!" வருத்தமாய் தலை அசைத்தான் அர்ஜுன்.
"மச்சி.. நம்மெல்லாம் ஒரு பெரு வெற்றிய நோக்கி பயணச்சுட்டு இருக்கோம்.. இதெல்லாம் சிறு வெற்றி.. இதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு.!" காமேஷ் சொல்ல அர்ஜுனுக்கு பீரிட்டு வந்தது சிரிப்பு.." .
சில்லு சில்லாய் நொறுங்கியது அர்ஜுன் சோகம். சிரித்துக் கொண்டே ஹைபை தட்டினான்.
"உனக்கு என்ன ஆச்சு மச்சி..?" தயக்கத்தோடு அர்ஜுன் அக்கறையாய் கேட்க,
"எனக்கும் மூனு தான் மச்சி." சிரித்துக் கொண்டே சொன்னான் காமேஷ்.
"ஏய்.. ஒரு நிமிஷம் இரு.. கொஞ்சம் முன்னாடி தான் எங்கிட்ட அஞ்சுன்னு சொன்ன.." எதோ கண்டுபிடித்த விட்ட மாதிரி அசோக் கேட்க,
"ஊம்.. அது ரெண்டையும் உன்ன மாதிரி ரீவேல் போட்டு பாஸ் ஆயிடுவேன் மச்சி"காமேஷ் சொல்ல அவர்கள் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே வீடு திரும்பினர்.
ஆல் கிளியர் ஆசாமிகளை விட அதிகமாய் இருந்தது அவர்கள் ஆனந்தம்.
என் அழுகையில்
வழியும்
உப்புக் கண்ணீரைக் கூட ,
சிரித்துச் சிந்தும்
சர்க்கரைத் துளியாய்
எப்படித் திரித்தாய்..?! அகில் மனம் கவிதை கிறுக்கிக் கொண்டிருந்தது.
"ச்சே.. மச்சி.. நந்தினி கூப்டிட்டே இருக்கா. ரிசல்ட்ட தான் கேட்பா. சமாளிச்சிட்டு ஒரு பைவ் மினிட்ஸ்ல வரேன்..!" சமாளிக்கும் நிலைமை எல்லாம் கடந்து போய் ஒரு மணி நேரம் ஆகி விட்டதை உணராத அர்ஜுன் கீழ் அறைக்குள் சென்றான் மொட்டை மாடியிலிருந்து.
"நான் கூட அனிதாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வரேன்" என்று சென்னிமலை போனை எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்ப காமேஷும் அகிலும் கண்களை மூடி தலையில் கை வைத்துக் கொண்டனர்..
ரெண்டே நிமிடத்தில் அசோக் திரும்பி வந்தான். "லைன் ரொம்ப பிசியா இருக்கு மச்சி.. ஒன்னும் பிரச்சன இல்ல. அப்புறம் பேசிக்கறேன்."
அதற்குமேல் அன்று அசோக்கை கலாய்க்கும் சக்தி இல்லாத காமேஷ் "அகில், சுஜாதாவோட கனவுத் தொழிற்சாலை படுச்சிருக்கியா நீ? சினிமா பத்தியா அது.?!" டாப்பிக் மாற்றினான்.
சுடச் சுடச் தொடங்கிவிட்டது அன்றைய மொட்டை மாடி அரட்டை. நகர்ந்தது நேரம்.
அவர்கள் சுவாரஸ்யத்தில் எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் எனத் தெரியாது. சட்டென கீழ் அறையிலிருந்து எதோ சப்தமாய் உடைந்து நொறுங்குவது போல் கேட்க,வேகமாய் விரைந்தனர்.
அகில் கதவு திறந்தான். சில்லு சில்லாய் நொறுங்கிக் கிடந்தது அர்ஜுன் செல்போன். இரண்டு மூன்று நரம்புகள் அறுந்து ஓரமாய் வீசப் பட்டிருந்தது அவன் கிதார்..
"பகீர் "என்றானது மூவருக்கும்.அர்ஜுன் படுக்கையறை கதவை வேகமாய் அடித்துச் சாத்த, தூக்கி வாரிப் போட்டு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அகில் மெதுவாய் உள்ளே நுழைந்து கதவைத் தட்டினான்.. "மச்சி..!!???"
தொடரும்

No comments:
Post a Comment