Sunday, March 30, 2014

...கற்க கசடற பகுதி 8


ரிமோட்டால்
விமான டீவியின் சேனல்களை
நகர்த்திக் கொண்டிருந்தான் அகில் ..

உலக மொழி படங்களில் ஒன்றாய்
தமிழும் இருக்க
ஆர்வமாய்
திரையைச்  சொடுக்கினான்..
'காக்க காக்க' பளிச்சிட்டது கண்களில்..

"சரி, போர் அடிக்குது படத்துக்கு போலாமா?"  விக்ரம்.

"படத்துக்கா? இப்பவா? நைட் 8:30 ஆச்சே, 11:30க்கு ஹாஸ்டல் கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க. அப்பறம் உள்ள வர முடியாது. பெரிய பிரச்சன.." பதற்றமானான் ராகவ்.

"அத அப்புறம் பாத்துகலாம் மச்சி.. நாளைக்கு லீவு தான. நான் ரெடி. என்ன படம்?" ஆர்வமானான்  காமேஷ்

"'காக்க காக்க', க்ரோம்பேட் 'வெற்றி  ல 'ஒ.கே  வா..?" எங்கிருந்தோ திடீரென்று வந்து இணைந்து கொண்டான் மனோஜ்.

"சரி ஓ .கே .." சந்தானம் போல கடைசியாய் தோள்  குலுக்கினான் அகில்..

உடைத்து போட்ட சப்பாத்திகளை விட்டெறிந்து  விட்டு மெஸ்ஸை விட்டு விரைந்தனர் அனைவரும்.

அது கல்லூரியின்
முதல் வார விடுமுறை.
ஆபரேஷன் 'காக்க காக்க' தொடங்கியது.

"உயிரின்..உயிரே .." விமானத் திரையிலும், க்ரோம்பேட் வெற்றி திரையிலும்
சூர்யா பாய்ந்து பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தார்..

"கொரியோகிரபி  சூப்பர் இல்ல மச்சி..வித்தியாசமா இருக்கு!" காமேஷ் சொல்ல,

தலையாட்டினான் அகில் அர்த்தம் புரியாமல்

பாடல் ..
வசனம்..
பாடல் ..
காதல்..
வசனம்.. வசனம்.. வசனம்..!!
'இடைவேளை..'
சமோசா..
சிகரெட் புகை நெடி ..
மறுபடி.. வசனம்..
வசனம்.. வசனம்.. வசனம்!!
வில்லன் ..
பாடல்..
வசனம்..
சண்டை..

முடிந்தது.. காக்க காக்க..
தொடர்ந்தது ஆபரேஷன் 'காக்க காக்க'

நள்ளிரவு..
கொட்டும் மழை..
நழுவ விட்ட
கடைசிப்  பேருந்து ..
ஒழுகி வழியும்
ஒற்றை நிழற் குடை..
தெருநாயோடு மழைக்கு
ஒதுங்கிய
ஒரு  குடி'மகன்.
நெடுஞ்சாலையில்
நிற்க மறுக்கும்  வாகனங்கள்..
திரும்பிச்  செல்ல
வழி தெரியா தவிப்பு..

அது ..
ஆபரேஷன் 'காக்க காக்க'வின்
ஆரண்ய காண்டம்..

"இதுக்குத் தான் நான் அப்பவே சொன்னேன்.." ராகவ் புலம்ப.

"இரு மச்சி .. பார்ப்போம்..நாங்கெல்லாம் இப்படி மிட் நைட்ல எத்தன தடவ மாட்டிருப்போம். நோ ப்ராப்லம். எல்லாம் நான் பாத்துகறேன்." ஆல் இன் ஆல் மனோஜ் கண்களை மூடி கழுத்தை ஒரு சைசாய் வளைத்தான்.

திடீரென, எதையோ பார்த்துச் சப்தமாய் குறைத்து தெரு நாய் அகில் பக்கத்தில் வர,

"அடிங்கோ..(கீங்க்.)" குடி'மகன் விசிறி அடித்த பாட்டில் சில்லு சில்லாய் அகிலின் காலடியில் நொறுங்கியது. பயத்தில் உடம்பு உதற செய்வதறியாது அவனை  உற்றுப் பார்த்தான் அகில்.

"ங்கொய்யாலே.. இன்னா.. இங்க லுக்கு.. படல இல்ல.. மூடினு   ப் ப் ..போ..வந்தேன்ன்..னு வை...."

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் நாய் குறைக்க,

சட்டென்று  ஓடி அதை எட்டி உதைத்து .. பேண்டுக்குள்  இருந்த கத்தியை வேகமாய் எடுத்து காற்றில் வீச..

வேகமாய் ஓடியது நாய் மட்டும் அல்ல நம் பஞ்ச பாண்டவர்களின் இதயத் துடிப்பும் தான்...

"மச்சி.. நம்ம வேணா அடுத்த பஸ் ஸ்டாப்  போலாமா??" வேறு யாரும் அல்ல  ஹஸ்கி வாய்சில் நம் ஆல் இன் ஆல் மனோஜ்..

அவர்கள் லேசாய் நகர ,

"தம்..பீ.. சிக..லே..ட் இருக்கா? சிகலேட்.."

கால்கள் நடுங்க வார்த்தைகள் ஏதுமின்றி மௌனத்தில் அவர்கள்..

"கேட்கரோம்ல. என்ன இருக்கா இல்ல இல்லையா??"

திறு  திறு  விழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

"('கீங்.... 'பசங்களா..) திமுரா ? கேட்ட பதில் சொல்ல மாட்டீங்க " மறுபடியும் அவன் எழ,

சப்த நாடியும் அடங்கிவிட்டது அத்தனை பேருக்கும்..

"இல்லண்ணா.." ஒருமாதிரி வார்த்தையை வரவழைத்துக் கொண்டு சொன்னான் விக்ரம்..

"ஊம்.. அத அப்பவே சொல்றது.. போங்கடா.. பொறம்போக்குகளா.."

துடித்தது மீசை மனோஜுக்கு,
ஆனால் நட்பு நாடி வந்த உறவு 'அடக்கு அடக்கு' என்று சொன்னதா தெரியவில்லை ..
நடுங்கிப் போன சப்த நாடி  சொன்னது,
''என் கொல சாமி என்ன எப்படியாவுது இங்கிருந்து காப்பாத்து.."

இது..
ஆபரேஷன் 'காக்க காக்க'வின்
ஆப்பு காண்டம்..

"தேங்க்ஸ் நா.. ரொம்ப தேங்க்ஸ்"

"பாத்து போங்கப்பா.. படிக்கிற பசங்க..இனிமே  இப்படி இராத்திரில  தனியா மாட்டிக்காதிங்க.." விடை பெற்றார் லாரி ஓட்டுனர்..

"மச்சி உன் மொபைல் லைட் ஆன் பண்ணு." இருளைக் கிழித்தது மொபைல் வெளிச்சம்.

"நல்ல வேல மச்சி, அந்த லாரிக் காரர்  மட்டும் நிறுத்தலேன்னு வை.. இன்னிக்கி ஆப்பு தான்.."

"அவன் லாரி வரைக்கும் தொரத்திட்டு வரான்.. எனக்கு அல்லு இல்ல மச்சி.."

"அவங்கிட்ட மட்டும் கத்தி இல்லன்னு வெச்சுக்க.. பிரிச்சு மேஞ்சிருபேன்.."

குரல் வந்த திசையை எல்லோரும் திரும்பிப் பார்க்கச் சட்டென நிறுத்தினான் மனோஜ்.

காரிருள்..
ஏரிக் கரை..
புதர்களின் ஊடே
ஒற்றையடிப் பாதை..
'சரக்..சரக்.'
சப்தம்..
குடிகாரனைப் போல்
ஆடிக் கொண்டே
முன்னால் நடக்கும்
மொபைல் வெளிச்சம்..
சற்று தொலைவில் லேடிஸ் ஹாஸ்ட்டல்..

"மச்சி.. இந்த நேரத்துல லைட் போட்டுக்குட்டு இவளுக  என்ன பண்றாளுக.." நியாயமான சந்தேகம் நச்சரித்தது அங்கிருந்த ஏதோ  ஒரு எடிசனை..

"அதானே " அமோதித்தான் அகில்..

"யாருக்குத் தெரியும் நம்மள மாதிரி நைட் படம் பாத்துட்டு, கேட் ஏறி குதுச்சு வந்தாலும் வந்துருபாளுக."

"உம். ஊம்.. அது மட்டுமா நீ வேற? " கிளுகிளுப்புக்கு ஏதோ ஒரு குரல் திரி கிள்ள, சிதறிக் கிடந்த இரும்புத் துகள்கள் கேர்ல்ஸ் ஹாஸ்ட்டல் என்னும் மெகா காந்தத்தால்  ஒன்றாய் சேர்ந்தது.

நிலவில்
வடை சுடும் பாட்டியை
கற்பனையில் நினைத்தே
குதூகளிக்கும்
குழந்தைப் பருவம் மாதிரி..

எதிர் பாலைப் பற்றி
கற்பனையிலேயே
கனவு கண்டு
குதூகளிப்பது தானே
இளமை..!

வாழ்க்கைப் பாதையில்
வந்து போகும் சுகங்களில்
அதுவும் ஒரு சுகம்!! சிருங்காரம்!!

உற்சாகத்தில் உள்ளம் குதிக்க
சப்த்தமாய் சிரிப்போடு
சிருங்காரமும் சேர்த்து
ஏக்கத்தோடு பேசிக்கொண்டே
நடந்தனர்..

"ஷ்..ஷ்.. மெதுவா...மெதுவா.."

" அப்பா கேட் பூட்ல.." முகம் மறைக்கும் இருளில் மெதுவாய் முணுமுணுத்தான் மனோஜ்..

"பாத்துடா.. வாட்ச் மேன்  உள்ள காரிடர்ல  தூங்கரான்னு  நெனைக்கிறேன். முழுச்சுக்க போறான். சத்தம் வராம தெற "

"நானும் விக்ரமும் மொதல்ல உள்ள போறோம். போய் ஒகே நா மிஸ்டு கால் குடுக்றோம்.. அப்புறம் நீங்க வாங்க.. ஒகவா?.செல்'ல சைலண்ட் மொடுல போடு.." ஹாஸ்டலுக்கு வெளியே ஹஸ்கி வாய்சில்  மனோஜ் புரட்சிக்கலைஞர்  விஜயகாந்த் மாதிரி மேப் இல்லாமல் பிளான் போட,

"கிரீச்." இது கதவு..

"ஷ் மெதுவா.." குண்டூசி சப்தம் கூட அணுகுண்டு மாதிரி பயப்படுத்தியது அவர்களை.

மெதுவாய் கதவு திறந்து இருட்டில் மறைந்ததனர் விக்ரமும் மனோஜும்..

கொஞ்ச நேரத்தில்,

"கிர்.. கிர்.." சிணுங்கியது அகில் மொபைல்

"சீக்கிரம் ஆப் பண்ணு." சைலண்ட் மொடின் சத்தத்திற்கும் ஷாக் ஆனான் ராகவ்..

அவர்கள் மெதுவாய் உள்ளே நுழைந்து சட்டெனெ இருட்டுக்குள் வேகமாய் ஓடினர்.

காமேஷும், ராகவும் கொஞ்சம் முன்னால் ஓட, அகில் பின் தொடர, சட்டென ஒரு சத்தம்..

"அய்யோ .. அம்மா..
டேய்.. யாருடா அது.. உள்ள ஓடறது.. நில்லுங்கடா.."

விளக்குகள் பளீரென உயிர் பெற்றது..

தொடரும்... 

No comments:

Post a Comment