Thursday, March 20, 2014

...கற்க கசடற பகுதி 4


ஏனோ 
விமான டீயின் 
வாசம் அகிலுக்கு 
விடுதி டீயை 
நினைவு படுத்தியது..
"உலகின் மேல்தட்டு மனிதனும் 
கீழ்தட்டு மனிதனும் 
ஒரே மாதிரி டீயை குடித்து 
ஒரே மாதிரி தான் வாழ்கிறானோ..
நிம்மதியற்று..?"

பக்கத்து சீட்டுக்காரன்   
மதுக் கோப்பையின் போதை 
பலமாக சிந்திக்க வைத்திருந்தது அகிலை.. !

"காமேஷ்.. அப்புறம் " அகில் அறைக் கதவுகளைத் திறக்க,
  
"அப்பறம் நாங்க எங்க கடமைய செஞ்சிட்டோம் 
ரெண்டு பெரும் நல்லா படிங்க பா..
அது தான் எங்களுக்கு முக்கியம்.."
அந்த அறையின் அடுத்த இன்னிங்ஸ் நடந்து கொண்டிருந்தது. 

விக்ரம்.. மனோஜ் ..
இருவர் பெற்றோரும்  
அறிவுரை அருவியில் அவர்களை நனைக்க, 
திறு  திறு விழிகளில்
குறு குறு பார்வை..!

காமேஷ், அகில் 
இருவர் கண்களுக்கும்  முன்
ஒரு கொசுவர்த்தி சுருள் ஓட..
ரகசியமாய் சிரித்துக்  கொண்டார்கள்..
"வாங்கப் பா.." மீசையை தடவிக் கொண்டே அழைத்தார் மனோஜின் அப்பா.
"அப்புறம் மனோஜு.. விருமாண்டி எப்படி இருக்காக?" மனோஜ் அப்பாவுக்கு காமேஷ் ஒரு நாள் வைத்த பட்டப் பெயர் நினைவுக்கு வர, விமானத்தில் களுக் என சிரித்தான் அகில்.

வேலையும்,
விமான பயணமும்..
ஆசையோடு தொடங்கினாலும் 
அழுது கொண்டே தொடங்கினாலும் 
அலுத்துப் போய்விடுகிறது 
சீக்கிரமே.. 
அதன் காரணம் 
இரண்டிலும் 
வெட்டியாய் 
சீட்டு தேய்க்கும் 
ரகசியமே..

இது மாதிரி 
மொக்கை கவிதைகள் தாண்டி 
அகில் 
சில நேரம் 
நல்ல கவிதைகளையும் எழுதுவது உண்டு...

அன்று இரவு அப்படித் தான் 
எழுதிக் கொண்டிருந்தான் ரகசியமாய் 
கல்லூரிச் சோலையில் - தான் 
முதல் நாள் சிறகு விரிக்கப் போகிற 
அனுபவம் பற்றி..
"என்ன அகில் காலேஜே ஆரம்பிக்கல, அதுக்குள்ள படிப்பா?" மனோஜ் சிரித்த்துக் கொண்டே கேட்டாலும், அகிலுக்கு அதற்குள் இருந்த நக்கல் புரிந்தது. 

"இல்ல சும்மா தான்." ரொம்பவே கூச்ச சுபாவம் கொண்ட அகில் தன் கவிதைகளை அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் காட்டுவதில்லை. 
"அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க தனியா..? வாயேன் எதா பேசிட்டு இருக்கலாம்."

அவர்கள் பேசிய அந்த எதா, அகிலை கொஞ்சமும் ஈர்க்கவில்லை. இருந்தும் சிரித்து சமாளித்தான். 

மறுநாள் காலை
புது மனைவியின்
முதல் நாள் சமையல் போல அவ்வளவாய் ருசி தெரியாத  
அந்த மெஸ் இட்லியை சாப்பிட்டு விட்டு  
முதல் நாள் கல்லூரி..  
வலது கால் வைத்தான்..!

பல ரவுண்டு டிராலி ஷாட்டுகளும்
டாப் ஏங்கில் ஷாட்டுகளும்
சுற்றிச்  சுழன்றது
பரபரக்கும் இசையோடு
அவன் இதயத்துக்குள்..

"தம்பி ID கார்ட் எடுத்து வெளிய போடுப்ப.." - கரகரப்பாய் கரைந்தார் வாட்ச்மேன்..

விக்ரம், மனோஜ்
ECE ப்ளாக் போக..
காமேஷ் செடி கொடி இல்லாத
IT  பூங்காவுக்குள் நுழைய..
EEE டிபார்ட்மெண்டுக்குள் நுழைந்தான்  அகில்

"ஹாய் I'm Ragav. first yearஅ?" 
  
"புன்னகையோடு கை குலுக்கினான் 
தன் முதல், வகுப்புத்  தோழனோடு அகில்."

எல்லா கை குலுக்கல்களும் 
ஒரே மாதிரி தான் 
தொடங்குகிறது..
வாழ்வில் இதுவரை காணாத ஒரு 
சுகமான நேசத்தோடு..

ஆனால் சில மட்டுமே 
நிஜமாய் இருக்கிறது.. 
சில நிஜத்துக்குப பக்கத்தில் 
இருகிறது.. 
சில நரகமாகவே மாறிவிடுகிறது.. 


தொடரும்... 

No comments:

Post a Comment