Monday, March 31, 2014

...கற்க கசடற பகுதி 12


......பாடல் 1-  இங்கே கிளிக் செய்யவும்..


"வானத்தில் இணைகிறேன்
ஒரு புள்ளியாய் உணர்கிறேன்.."

என்று அர்ஜுன் கவிதையை கானமாக்கி முடிக்க, கோரஸில் எழுந்தது கை தட்டல்..

அகிலுக்கு உடம்பெங்கும் பரவியது ஒரு
ஆனந்த மின்சாரம்..
மகிழ்ச்சியில் நிறைந்தது அவன்  மனம்..
நெகிழ்ச்சியில் உறைந்த்தது அவன் அகம்.


"சூப்பர் .. மச்சி.." அர்ஜுனை அழுத்தாமாய்  பற்றிக்  கை குலுக்கினான்
"வாய்ப்பே இல்ல மச்சி.." இதயத்தில் பொங்கிய இன்பத்தை வார்த்தையாக்கப்  போராடியது அவன் நாக்கு.

"சாரி மச்சி.. டீயுனுக்காக உன் கவிதைய கடுச்சு குதற வேண்டியதா போச்சு.. ரொம்ப பீல் பண்ணி எழுதி இருப்ப..ஸ்பாயில் பண்ணிட்டனா?"

"சே..அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி.. இப்ப தான் கவிதையோட கரக்ட் பீல் இருக்கு.. உண்மையிலேயே சூப்பர் மச்சி..சூப்பர் " அனந்த சேற்றில் வார்த்தை தடுமாறியது அகிலுக்கு.

"ஏய்.. சூப்பர் டா .." இருவரின் கையையும்  குலுக்கி  இணைத்து அசோக், "இப்படித் தான் மச்சான்  எங்க சென்னிமல ஸ்கூல் ல பா.விஜய் வேல பாத்தப்ப.."

கலைந்து விட்டது  கூட்டம்.

'அசோக் ஆனால் ..
உன்னை நன்றியோடு
நினைத்துப் பார்க்கிறேன்..
நீ அன்று இணைத்தது
வெறும் கரங்கள் அல்ல..
கவிதை, இசை என்று
வெவ்வேறு பாதையில்
பயணித்துக் கொண்டிருந்த
ஒரே ஆற்றின் இரண்டு கரைகள்..
நீர்த் துளியாய் நீ இருந்தாய்
இசைத்  துளியால் நான் நனைந்தேன்..'

என்றோ ஒரு நாள் பயங்கர பீலிங்கில் அகில் எழுதியது எட்டிப் பார்த்தது விமானத்தில் அவன் படித்துக் கொண்டிருந்த டைரிக்குள்ளிருந்து,

'அட.. சென்னிமல உனக்காக இவ்வளவு பீல் பண்ணிருக்கனா..!? இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..!' புன்னகைத்துக்  கொண்டே டைரியின் பக்கங்களைத் திருப்பினான்..

'என் நேற்றைக்கும்
இன்றைக்கும் இடையே
நடந்து விட்டது சில
நூற்றாண்டு மாற்றங்கள்..

அழுது அழுது
வழிந்தது நேற்றைய
கண்ணீர்!

சிரித்து சிரித்துத்
சிந்துகிறது இன்றைய
கண்ணீர்!

இதயம் வலிக்க
இருட்டில்
அழுதிருக்கிறேன் அன்று!

வயிறு வலிக்க வலிக்க
சிரித்து விட்டு
மூச்சிறைக்கிறேன் இன்று!

அடடா நண்பா ..
நீ என் வாழ்வில்
ஏற்படுத்திய மாற்றங்கள்!

அத்தனையும்
என் சந்தோஷத்தின்
சத்தியமான தோற்றங்கள்!

என் இரவுகளை
இசையால்
இனிக்க வைத்தாய் !

என்  கவிதைகளை
கீதமாய்
சுவைக்க வைத்தாய் !

என் வரியோடு
சுவரத்தை
இணைத்து வைத்தாய் !

நிரந்தரமாய்
உன்னோடு என்னைப்
பிணைத்து வைத்தாய்!

நண்பா..
நீயும் நானும்
பேசாத பொருளில்லை
அவனியிலே!

இனி நாம்
பேசப்
புதிதாய் பொருள் வேண்டும்
தரணியிலே..!'

டைரியில் கவிதையை
மீண்டும் மீண்டும்
படித்துப் பார்த்தான்! - விமானத்தில் அகில்
நிறுத்தி நிதானமாய்
அதை தடவிப்  பார்த்தான்..

என்றோ ஒரு நாள்..

ராகவின் இரும்புப் பிடியிலிருந்து
கிட்டத் தட்ட
நழுவி விட்ட  ஒரு பொழுதில்,

மனோஜ், விக்ரம்
கும்பலிடமிருந்து அகில்
முக்கால்வாசி விலகிவிட்ட
ஒரு பொழுதில்,

உறங்கவும் குளிக்கவும் மட்டுமே
அறைக்கு வந்து
களிப்புகளுகெல்லாம்
அர்ஜுன் அறையிலேயே தஞ்சமாகிவிட்ட
ஒரு பொழுதில்,

இசையும்
கவியும்
நட்பும்
நேசமும்
அவர்களை
இணைத்துப் பிணைத்து விட்ட
ஒரு பொழுதில்,

பழைய கண்ணீர் காயங்களுக்கு
சிரிப்பு மருந்து
பூசிக் கொண்ட
ஒரு பொழுதில்,

அகில்
அந்தக்  கவிதையை
எழுதி இருக்கக் கூடும்..

விடுதி
வகுப்பறை
விரிவுரையாளர்கள்
அறிவுரையாளர்கள்
அறுவை உரையாளர்கள்..
ஆய்வுக் கூடம்
ஒர்க் ஷாப் எனப்படும்
ஆயுதக் கூடம்..
புரிந்தும் புரியாத
கணினி வகுப்புகள்..
புரியவே புரியாத
கணக்கு வகுப்புகள்..
சுஜாதா சொல்லும்
பூச்சி  பூச்சி
கணக்குகளால்
தலையைச் சுற்றி
குருவி பறக்க விடும்
சொச்ச மிச்ச
இதர வகுப்புகள்..
புயலாய்க்  கடந்து
புல்ஸ்டாப் போட நெருங்கியது
முதல் செமஸ்டர்..

மயான  அமைதியில் விடுதி அறைகள்..
கலவர பதற்றத்தில் மாணவர்கள்..
நரபலி சாமியார் மாதிரி
தாள்  விரி கோலத்தில்
கணிதப்  புத்தகங்கள்..

ஆம்
மறு நாள் செமெஸ்டர்  தேர்வு!
கணிதம்!!

"மச்சி ஈகன் வெல்யூ, ஈகன் வெக்டார் தெரியுமா?" தலை முடி கலைந்து, பாயைப் பிராண்டி சட்டையைக் கிழிப்பதற்கு முந்தய ஸ்டேஜில் ஆ ல் இன் ஆல் மனோஜ்..

"அது ஒன்னுமே  இல்ல மச்சி.. செம ஈஸி .. எனக்கு நல்லாத் தெரியும்.. உனக்குத் தெரியாதா?.. நீங்கெல்லாம் கிளாஸ் நடத்தும் போது  என்ன தான் பண்ணுவீங்களோ !!" காண்டா மிருகத்தை காண்டாக்கும் ராகவ்..

"மச்சி.. ஒண்ணுமே படிக்கலடா.. நாளைக்கு சத்தியாம நான் பெயில் தான்.." சொல்லிக் கொண்டே பார்முலாவை மனதுக்குள் முணுமுணுக்கும் விக்ரம்.

"மச்சி.. அகில் எங்க? அவன் அன்னைக்கு இந்த டிப்பறேன்ஷியல் கேல்குலஸ் சம்  ல  என்னமோ பண்ணனும்னு சொன்னான்.." பயப் பதற்றத்தில் அகிலைத் தேடும் காமேஷ்..

"யாரு கரடி முத்துவா..? டென்சன் ல எங்கியா கோட்டர்  அடிச்சுட்டு குப்புற படுத்திருப்பான்..!" அத்தனை கலவரத்திலும்  ராகவ்..

"மச்சி.. நம்ம அன்னைக்கு நெக்ஸ்ட் செம் ஹாஸ்டல தங்காம செங்கல்பட்டுல ரூம்  பாக்கலாம் னு  ப்ளான் போட்டமே அகிலுக்குச் சொன்னமா? " படிப்பு டென்ஷன் தாங்க முடியாமல் டாபிக் மாற்றினான் மனோஜ்..

"இல்ல டா.. அவன் எப்படியும் வர மாட்டான்னு நினைக்கிறன்!"

"கண்டிப்பா மச்சி.. நோ ப்ராப்லம்..வீடு எங்க சொன்ன?" அர்ஜுன் அறையில் புத்தக வளையத்திற்குள் உட்காந்திருந்த அகிலின் மனம் மகிழ்ச்சியில் குதித்தது..

"ஏரிக்குப்  பக்கத்துல.. அந்த கவர்மண்ட் ஸ்கூல்  இருக்கு இல்ல அதுக்கு எதிர் ல மச்சி .. ஹாஸ்ட்டல் பீஸ் ரொம்ப அதிகமில்ல.. அதனால தான்.. தெரிஞ்சவுங்க வீடு தான். மாடி ரூம்.. மூனு பேரு தங்கலாம்னு சொன்னாங்க.. அது தான் உனக்கு ஒகே நா.. " இழுத்தான் அர்ஜுன்..

"மச்சி.. ஒரு பிரச்சனையும் இல்ல. நான் ரெடி. ஆனா  இன்னொருத்தருக்கு  என்ன பண்ண.. ?"

"பாப்போம் மச்சி.. யோசிப்போம்.." அர்ஜுன்..

"மச்சி இந்த கார்டீசியன் கோ ஆர்டிநேட்ஸ் பாத்திட்டியா?"

"இல்ல மச்சி.. இம்பார்டண்டா?" பதற்றத்தில் பக்கங்கள் திருப்பி பேனா கடித்தான் அகில்.

"செங்கல்பட்டு போய்ட்டா..  ஒரு சுசிகி  வாங்கிருவேன் மச்சி.." மனோஜ்

"சுசுகி  லாம்  ஓல்ட் டா.. பல்சர் வாங்கு..அது தான் கெத்து.." விக்ரம்

"பல்சரா ..?? அது வெல ஜாஸ்தி மச்சி.. "

"இல்ல மச்சான்.. இப்ப சீப்பாயிடுச்சு. எங்க மாமா கூட வாங்குனாங்க.. ப்ளாக் பல்சர் 180cc  என்ன கெத்தா இருந்துச்சு தெரியுமா??"

"ப்ளாக்கா..? ஆனா நான் ப்ளூ தான் வாங்குவேன்.."

"ப்ளூ கலர் டல்லா  இருக்கும் டா."

"180cc  ரொம்ப ஹெவிய இருக்காது."

"180cc ...."

"டேய்.. டேய்.. நிறுத்துங்கடா .. நாளைக்கு பல்சர்ல யா எக்ஸாம்  வைக்கிறாங்க.. மூடிக்கிட்டு படிங்கடா. அவஅவனுக்கு இங்க பேன்ட் நனையுது.." டென்ஷன் ஆனான் ராகவ்..

பயம், பதற்றம், டென்ஷன்,என மிக்சிங் காக்டைலில் அவர்கள் வயிறு கலக்கிக் கொண்டிருக்க,

திடீரென மனோஜ் மொபைல்  சினுங்கியது..

"Question Paper Out .. Come 3rd floor.." மொக்கை ஆங்கிலத்தில் வந்தது அந்த குறுஞ் செய்தி..

"டேய்.." சப்த்தமாய் கத்தி புத்தகத்தை விட்டெறிந்தான் மனோஜ்..

"அப்படியா.. வா மச்சி போலாம்.." அர்ஜுன் அறையில் அவசரமானான் அகில் ..


தொடரும்..

No comments:

Post a Comment