"இதுக்குத் தான் நான் அப்பவே சொன்னேன்.!!" அருணாச்சலம் பட வி.கே. ராமசாமி மாதிரி தேர்வறை விட்டு வெளியே வந்தான் மனோஜ்
" என்ன டா.. இப்படி ஆப்படுச்சுட்டானுக. நேத்து அவன் சொன்னதுல இருந்து ஒரு கொஸ்டீன் கூட வரலயே டா.. பாசாயிடுவியா மச்சி..?" காமேஷும், விக்ரமும் வாசலில் நின்றபடி கவலையோடு கேட்க,
"ஏன்டா வயித்தெருச்சல கெளப்புறீங்க.. ம... புடுங்கி எவன்டா அவன் சொன்னது கொஸ்டீன் பேப்பர் அவுட்டுன்னு . ங்.. 'கீங்க்..' அவன் மட்டும் என் கைல கேடச்சான்னு வை.." கையில் கிடைத்த கொஸ்டீன் பேப்பரை வெறியோடு கசக்கினான் மனோஜ்.
"மச்சி ..! பட்டய கிளப்பிடேன் மச்சி.. வாய்ப்பே இல்ல செம ஈசி இல்ல பேப்பர்." பக்கத்து அறையிலிருந்து கிட்டத் தட்ட குதித்துக் கொண்டே வந்தான் ராகவ்.
'சோதனை மேல் சோதனை.. ' என்று யாரோ பின்னால் ரீ ரெகார்டிங் வாசிக்க ஸ்லோ மோஷனில் திரும்பினர் மூவரும்.
"என்ன மச்சி ..?! என்ன ஆச்சு..?" ராகவ்..
"தேராது மச்சி.. அநேகமா புட்டுகுச்சுன்னு நெனைக்கிறேன்.."
"அதுக்குத் தான் ஒழுங்க ஒக்காந்து எல்லாத்தையும் படிக்கணும்.. சும்மா கொஸ்டீன் பேப்பர் கெடச்சுதுன்னு போனா.." ராகவ் சொல்லிக் கொண்டே இருக்க மூவரும் சைமல்டேநியசாய் விட்டம் பார்க்க,
பிளாஷ் பேக்..
"மச்சி அவன் தந்த கொஸ்டீன் தவிற வேற எதாவது படிக்கனுமாடா.?? எனக்கு என்னமோ பயமா இருக்கு டா..!! ஒரு வேள வரலைனா? " பய பதற்றத்தில் காமேஷ்
"மச்சி..! டோன்ட் ஒரி மச்சி.. அதுலயே நான் சாய்ஸ் விட்டு தான் படிக்கப் போறேன்.. நீ ஒன்னும் கவலையேப் படாத ! அதே தான் அப்படியே வரும்.." இது ராகவ்!
"நல்லா சொன்ன மச்சி..காமேஷ் நீ ஏன் இப்படி டென்ஷன் ஆகுற.. அத மட்டும் படி சும்மா டாப்பா மார்க் வாங்கலாம்..எதுலையும் முழுசா நம்பிக்க வைக்கணும். வாழ்க்கைல நம்பிக்க ரொம்ப (சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் ) ரொம்ப.. முக்கியம்..சூப்பர் ராகவ் .யு ஆர் ரைட் நானும் சாய்ஸ் விட்டே படிக்கறேன்.." மனோஜ்
"டேய்.." என்று மூவரும் கொஞ்சம் யோசித்து ப்ளாஷ் பேக்கிலிருந்து திரும்புவதற்குள்..
"அந்த டூ மார்க் கொஸ்டீனா..? அது ..!!" சம்பந்தமே இல்லாமல் யாரோ இருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு குதித்துக் கொண்டே பறந்தான் ராகவ்..
'இல்லடா ..அது இல்ல..'
'இல்ல இல்ல .. அது வேற ஈகுவஷன்.. 'கோ ஆர்டினேட்ஸ்' னா இது தான்.. இங்க பாரு ' என்று அவர்கள் ராகவோடு புக்கை வைத்து ரெபரன்ஸ் காட்டிப் பேசிக் கொண்டிருப்பதை உங்களைப் போலவே மனோஜும், காமேஷும் எதுவும் புரியாமல் பேக் பேக் என பார்த்துக் கொண்டிருந்தனர் .
குதித்துக் கொண்டே போன ராகவ் குப்பற விழுந்த கோன் ஐஸ் கிரீம் மாதிரி திரும்பி வந்தான்.
"சே.. அந்த டூ மார்க் தப்பு மச்சி.என்ன மச்சி பண்றது தப்பு பண்ணிட்டேன்.. சே.." பயங்கர பீலிங்கில் கையை உதறினான் ராகவ்
"டேய்..வேண்டான் டா. அவன் அவன் மொத்தமா புட்டுகும்னு செம காண்டுல இருக்கான்..இத்தோட நிறுத்திக்கோ.. இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுன.." மனோஜ் கடுப்பானான்.
"அது இல்ல மச்சி ..செண்டம் எய்ம் பண்ணுனேன்.. அநியாயமா போச்சு..ச்சே.. "
மனோஜ் ராகவை அடித்து துவைப்பது போல் பார்த்தான்.
"இவன் காலங் காத்தால நெத்தில பட்டையெல்லாம் போட்டுக்கிட்டு பழம் மாதிரி வந்த போதே நான் டவுட் ஆனேன் மச்சி.." காமேஷ் சோகத்தில் சிரித்தான்
"டேய் ராகவ் எப்படா படுச்ச? எங்க கூட தான டா இருந்த..?! இல்ல கான்டேத்த ரீல் விடறியா?"விக்ரம் நம்ப முடியாமல் ஆச்சர்யத்தில் கேட்டான்..
"மச்சி.. இதுக்குத் தான் கிளாசுக்கு ரெகுலரா போனும்.. கிளாஸ்ல ஒழுங்கா கவுனுச்சாவே 80% மார்க் வாங்கிடலாம்.." என்று சேதுபதி ஐ.பி.எஸ் விஜயகாந்த் மாதிரி ராகவ் பன்ச் டைலாக் விட,
மனோஜ் கோபத்தின் உச்சத்திற்கு போக, "அடிங்க.. உன்ன.. ங்கொ ....' கீங் .. கீங் .. கீங். கீங்.'"
வாசகர்களே எவ்வளவு நேரம் மியூட்டில் போட்டாலும் இது இப்போதைக்கு முடியற மாதிரி தெரியல.. வாங்க நமக்கு ஏன் வம்பு. நம்ம அந்தப் பக்கம் போவோம்..
அதோ தூரத்தில் அகிலும், அர்ஜுனும் ..
வாசகர்களே ஒரு நிமிஷம்.. இந்தக் கூட்டத்தில் யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் சூதானமாக வரவும்..
ஏன்னா..'காதல்ல பெயிலாயி டாஸ்மாக்ல உட்கார்ந்திருக்கவனும்,
கணக்கு பருச்சைல பெயிலாயி டவுசர் கிழிஞ்சு உட்கார்ந்திருக்கவனும்
புலம்ப ஆரம்பிச்சா
புல்ஸ்டாப்பே கிடையாது!!!' னு ஒரு சீன ஞானி சொல்லிருக்காரு..!!
"மச்சி அல்லு கிளம்புது மச்சி. மூனு 10 மார்க் தான் அட்டெண்ட் பண்ணுனே.. பத்துல 5 டூ மார்க் கரக்ட்டுன்னு நினைக்கிறேன்.அப்படி இப்படி ஏதா கிரேஸ் மார்க் போட்டா தான் மச்சி உண்டு.. நீ ?" இந்தியா டீம் மூணு பால் 4 ரன் என்ற நிலையில் எட்டாவுது விக்கட்டை கோட்டை விட்டு நிக்குமே அதே நிலையில் வேர்த்துப் போன கைகளுடன் படபடப்பில் அகில்.
'வாழ்கையின்
ஒவ்வொரு நிமிடமும்
நிறைந்திருக்கிறது
ஆச்சரயங்களால்
அதிர்ச்சிகளால்.
இரண்டுக்கும்
இடைப்பட்ட இடைவெளியில்
நின்று கொண்டு அதை
எதிர் பாராமல்
தரிசிப்பதும் ஒரு சுகம்'
ஓஷோவின் தாக்கத்தில், அகில் என்றோ எழுதிய அந்த கவிதையை இன்று அவனிடம் யாராவது சொல்லி இருந்தால் கழுத்தைப் பிடித்துக் கடித்து வைத்திருப்பான்!!
"அதே தான் மச்சி.. ஒண்ணுமே தெரியல.செம டென்சன் மச்சி. பாதிலே கொஞ்ச நேரம் வேற தூங்கிட்டேன். கடைசிலே டைம் பத்தல மச்சி.." அர்ஜுன்
"என்னது..!!?" சிரிப்பை அடக்கிக் கொண்டு "தூங்கிட்டியா?" "எப்படி? சே..! இல்ல ஏன் மச்சி..?" அகில்
"அது எப்பவும் அப்படி தான் மச்சி. பருச்சைல ரொம்ப டென்ஷன் ஆனா தூங்கிடுவென்.. 12th கெமிஸ்டிரி எக்சாம்ல தூங்கி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் நு ' தமிழ் பாட்டெல்லாம் எழுதி வெச்சுருக்கேன் மச்சி.."
சிரிப்பை அடக்க முடியவில்லை அகிலால், இருந்தும் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு ,
"சரி விடு மச்சி.. பஸ்ட் இயர் தான கிரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணிடுவானுகனு நினைக்கிறன்.. அவனுகளுக்கும் ரிசல்ட் காமிச்சா தான அடுத்த வருஷம் ஸ்டூடென்ட்ஸ் என்ட்ரி இருக்கும்..." சம்பந்தேமே இல்லாமல் லாஜிக் சொன்னான் அகில்..
அது தெரிந்தும், லாஜிக் நல்லா இருந்ததால் "ஆமா .. மச்சி கரெக்ட் தான் .. சரி விடு இத பத்தி இனி பேச வேண்டாம்.. அடுத்தது கெமிஸ்டிரி எக்ஸ்சாம்.. அத பாப்பம்.." என்று அர்ஜுன் சொல்ல அகில் சிரித்தான்..
"என்ன மச்சான்.. செண்டம் தான் போல..? செம சிரிப்பா இருக்கு?" வாயைக் கொடுத்து ______ புண்ணாக்கிக் கொள்ளவே வந்து சேர்ந்தான் அசோக்..
முறைப்பாய் ஒரு முறை இருவரும் அசோக்கைப் பார்த்து நடந்தனர்..
"அப்புறம் மச்சான்.. அந்த டிபரென்சியல் கேல்குலஸ் கொஸ்டீனுக்கு டிராயிங் மட்டும் போட்டுட்டேன் அது போதும் இல்ல..?" அசோக் சொல்ல,
"என்னது டிராயிங்கா?" .
"ஊம் "அசோக் வேகமாய் தலை ஆட்டினான்
டிபரென்சியல் கேல்குலஸ் கா? என்ன மச்சான் சொல்ற?" அதிர்ச்சியில் இருவரும் உறைந்தனர்
"அது தான் மச்சி.. அன்னைக்கு மேம் வரஞ்சாங்களே அது மச்சி!! இங்க பாரு " என்று அவன் நோட்ஸை எடுத்துக் காட்ட,
ரெசிஸ்டர், கேபாசிட்டரோடு எலக்ட்ரிகல் டிராயிங் இருந்தது.
நெஞ்சைப் பிடித்து அங்கேயே உட்கார்ந்து கண்ணீர் வர சிரிக்க தொடங்கிவிட்டான் அர்ஜுன்.
அகில் அசோக்கை கட்டிக் கொண்டு "நீ தெய்வம் மச்சான்.. முந்தின கிளாஸ் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் ல வரஞ்ச சார்க்கியூட் டைகிராம மாத்தி காப்பி பண்ணிட்டு.. மச்சான்.. முடியல மச்சான். மச்சி இதுக்கு உன் 'யாதும் ஊரே' எவ்வளவோ பரவா இல்ல"
"ஓ அது தானா!! என்ன டா ரெசிஸ்டர் எல்லாம் வருதேன்னு அப்பவே பாத்தேன்.. எனக்கு தெரியும் மச்சான் சும்மா தான் கேட்டேன். நான் அத அட்டெண்ட் பண்ணவே இல்ல வேற கொஸ்டீன் எழுதிட்டேன் " சுருங்கிப் போன முகத்தோடு ஒரு மாதிரி சமாளித்தான் அசோக்..
"டேய்.." சிரிப்பை அடக்க முடியாமல் "போதும். அதான் வரஞ்சுட்ட இல்ல.. அப்புறம் என்ன?? சும்மா சமாளிக்கற ப்ரியா விடு.. நீ அதாவுது வரஞ்ச, நான் அந்த கொஸ்டீன பாக்க கூட இல்ல.." அர்ஜுன்
"விடு மச்சான். பாத்துக்கலாம்.. பஸ்ட் இயர் தான கிரேஸ் மார்க் போட்டு .." மறுபடியும் அதே லாஜிக், அகில்
"ஆமா மச்சான். எங்க சென்னிமல ஸ்கூல்ல கூட.."
"மச்சான்.. சரி அப்புறம் பாக்கலாமா? கொஞ்சம் நோட்ஸ் ஜெராக்ஸ் எடுக்கணும்." அவசரமாய் விரைந்தனர் இருவரும்.
"என்ன மச்சி.. தேருமா ?" விடுதி அறையில் காமேஷ் மட்டுமே இருக்க அகில் விசாரித்தான்..
"Unfortunately the next ball was hammered towards the batsman and that was clean bowled..'ரவி சாஸ்த்திரி ஸ்டைலில் சொல்லி 'டபக்..' மூனு ஸ்டம்ப் பும் கழன்றுச்சு மச்சி.. உனக்கு?" என்றான் காமேஷ்
"அதே தான் மச்சி..எங்க மனோஜ்?"
"அவனெல்லாம் மனுசனா மச்சி..!!? பெயில் ஆயிடுவோம்னு கொஞ்சம் கூட ஒரு பீலிங்கே இல்லாம மெஸ்ல முட்ட கொழம்பு போடராங்கனு முக்க போயிருக்கு காட்டு யான. இவனெல்லாம் அன்லிமிடெட் மீல்சே ரெண்டு சாப்புடுவான் மச்சி " என்று காமேஷ் கோபமாக,
அகில் அடக்க முடியாமல் சிரித்தான்..
"நேத்து அந்த குண்டன் அளவுக்கு அதிகமா சீன் போட்டப்பவே எனக்குத் தெரியும். 'இத மட்டும் படுச்சா போதும் டாப்பா மார்க் வாங்கலாம், டாப்பா மார்க் வாங்கலாம்' ஆப்பு வெச்சுட்டான் மச்சி, தும்பிக்க இல்லாத யான மாதிரி இருந்துட்டு நம்பிக்க பத்தி ஒரு லெக்சர் வேற! அது கூட பரவ இல்ல மச்சி இந்த ராகவ் பட்டய போட்டுட்டு வந்து போட்டான் பாரு மச்சி ஒரு நாமம்.. கவுண்டமணி சொல்ற மாதிரி 'இந்த மாதிரி வேல செய்யறவனெல்லாம் இப்படித் தான் மச்சி இருப்பானுக' எனக்கு அது அப்ப தெரியாம போச்சு " காமேஷ் புலம்பிக் கொண்டே சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாய் ,
"மச்சி..அடுத்த வருஷம் இவனுக எல்லாம் செங்கல்பட்டுல ரூம் பாக்கறேன்னு சொல்றானுக உனக்கு தெரியுமா மச்சி..?" கேட்டான்.
"இல்ல மச்சான்.. எனக்குத் தெரியாது.. நீயும் போறியா..?" அகில்
"தெரியல மச்சி.. அப்பா அவ்வளவு தூரம் போக வேண்டாம் இங்கயே ஒரு ரூம் பாக்க சொல்றாரு. எனக்கும் இங்கேயே இருந்தா நல்ல இருக்கும் தான் தோணுது..!! ஆனா எங்க ரூம் பாக்கறது..?"
அகிலின் மூலைக்குள் படீரென ஒரு நூறு வாட்ஸ் பல்ப் எரிந்தது..
தன்னை மற்றவர்கள் கலாய்த்த போதெல்லாம் காப்பாற்றிவிட்டு ,எப்போதும் சிரிக்க சிரிக்க உரையாடி,புத்தகம், நாவல், கவிதை என்று பேசி, சினிமாவிலும், சமூகத்திலும் பேரார்வம் கொண்ட காமேஷிடம் அகிலுக்கு எப்போதும் ஒரு நல்ல நேசம் இருந்தும் உடனிருந்த மற்றவர்களால் அவனால் சரியாக பழக முடியாதிருந்தது.
இப்போது அதை எல்லாம் சிந்தித்த படி அகில், "மச்சி.. நான் கூட.." என்று ஆர்வமாய் ஆரம்பிக்க,
'சடார்..' என கதவு திறந்து ஏப்பம் விட்டபடியே உள்ளே நுழைந்தான் மனோஜ்.
"மச்சி.. ஒரே டென்சன் மச்சி.. நான் கொஞ்சநேரம் தூங்கறேன்.. ஒரு டுவென்டி பைவ் மினிட்ஸ்ல எழுப்பி விடறீங்களா? கெமிஸ்ட்ரி எச்சாமுக்கு ப்ரிபேர் பண்ணனும்!" கட்டிலில் குப்புற சாய்ந்தான் மனோஜ்.
'டேய்.. காட்டு யான 'காமேஷ் எட்டி வேகாமாய் உதைத்து தாங்க முடியாமல் சிரிக்க,
அகிலும் சிரித்தான்..
தொடரும்..

No comments:
Post a Comment