ஒரு நாள் அப்படித்தான்..
கல்லூரி முடித்து விடுதி அறைக்குள் நுழைந்தான் அகில்.
ஏற்கனவே ராகவ் தலைமையில்
கூடி விட்ட மற்றவர்கள்,
அவன் வந்ததும்
"பீ மிதித்த பெருந்தலைவர் வாழ்க..!" என்று கோரஸில் அலறினர். ராகவ் 'களுக்' எனச் சிரித்தான்..
அகிலுக்கு புரிந்து விட்டது.. காலையில் வகுப்புக்குச் செல்லும் போது ராகவ் அவனை தள்ளி விட, தான் ரோட்டோரம் இருந்த மலத்தை தெரியாமல் மிதித்து விட்டதை இங்கே கதையாக்கி விட்டான் என்று.
"டேய்.. நாயே.. நீ தானடா.. தள்ளி விட்ட.." உஷ்ணமானான் அகில்.
"அதெல்லாம் இல்ல நீ தான மிதிச்ச.. பீ மிதித்த பெருந்தலைவர்..!"
"'தலைவர்.. தலைவர்.. பீ மிதித்த பெருந்தலைவர்..' ராகவ் சொல்ல பின்னே கோரஸில் ஆரவாரித்து அலறி சிரித்தது கூட்டம்."
பொங்கிக் கொண்டிருந்த கோபம் தன் த்றேஷ்ஹோல்ட் லிமிட் தாண்டி வெடிக்க, அகில் பையை தூக்கி எரிந்து விட்டு ராகவ் மேல் பாய்ந்தான்..
அவன் கழுத்து நெரித்து வேகமாய் நெஞ்சில் மோத, அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத ராகவ் அப்படியே கட்டிலில் சாய்ந்தான்.. அவன் மேல் ஏறி ,பலம் கொண்ட மட்டும் கன்னத்தில் அறைந்து, தலையில் அடித்து, தோளில் குத்தி கொஞ்சம் மூச்சிரைத்தான் அகில்.
அதற்குள் ராகவ் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு .. அகிலை அப்படியே கீழே தள்ளி நெஞ்சில் குத்த, மாறி மாறி சர மாரியாக விழுந்தது அடிகள் இருவருக்கும்..
அலற மனம் இல்லை..
அவகாசமும் இல்லை..
அடியின் சூடு பரவும் முன் வந்து விழுந்தது
அடுத்த அடி..
"பட்..பட்.. தட்.. தட் தட்.. . டங்க்.. டர்.. "
கூடி இருந்த
கும்பல்..
ஒரு நிமிட அதிர்ச்சிக்கு பின்..
சண்டையைக் கொஞ்சம் ரசித்து விட்டு
வெள்ளைக் கொடியோடு வந்தது.
"விடு அவன.. விடுங்கறேன் இல்ல. விடு.. " ராகவின் மைனர் சைனை இறுக்கப் பிடித்திருந்த அகிலை பணித்தது கும்பல்..
"மச்சி .. நீ விடு மச்சி .. விடு.." அகிலின் சட்டைக் காலரைப் பிடித்திருந்த ராகவைத் தணித்தது கும்பல்..
"அவன விட சொல்லு.." ராகவ் முறைத்தான்..
"அவன மொதல்ல விட சொல்லு.." அகில் சிலிர்த்தான்.
"அடிங்க.. பெரிய இவுனுக.. விடுங்கடா மொதல்ல" மனோஜ் கோவத்தில் கலாய்த்தான்..
"கை எடுறா." அகில் மிரட்ட
அத்தனை வலியிலும் "பீ..!" நக்கலாய் ராகவ் சிரிக்க.. அகில் ராகவின் மைனர் சைனை அப்படியே பிடித்து இழுக்க, அது அறுந்து அகிலின் கையேடு வந்து விட்டது..
"அடிங்க.." ராகவ் மறுபடி பாய.. அதற்குள் கூடி இருந்த கும்பல்.. இடையில் பாய்ந்து இருவரையும் எட்டித் தொட முடியா தூரத்திற்க்கு இழுத்துச் சென்றது.
"ஒக்காருங்கடா.." சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்த இருவரையும் ஒரு மாதிரி அடக்கினான் விக்ரம்..
அதற்குள், அகில் வீசி எறிந்த தன் மைனர் சைனை ராகவ் தேடத் தொடங்க..
வலியின் சூடூ உடலெங்கும் பரவி கொஞ்சம் மூச்சிரைத்தான் அகில்..
அதற்குள் கும்பல் இருவரையும் கொஞ்சம் சமதானப் படுத்த,
"பேசிட்டு தான மச்சி இருந்தோம்.. அந்த நாயீ எதுக்கு மச்சி அடிக்க வந்துச்சு..பேச்சுனா பேச்சோட இருக்கணும்.. பேச தெரியலன மூடிக்கிட்டு போகணும்.. அத விட்டுட்டு அடிக்க வந்தா" அறுந்து போன மைனர் சைனை கோர்த்த படி ராகவ்..
"அப்படித் தாண்ட அடிப்பேன்..நீ மட்டும் என்ன அசிங்க படுத்துவ நான் சும்மா இருக்கனுமா ?" மறுபடி பாய்ந்தான் அகில்..
"டேய்.. சும்மா இருக்க மாட்ட. ஒக்காரு.." மனோஜின் தோற்றம் உண்மையிலேயே அகிலை கொஞ்சம் பயப்படுத்தியது..
உட்கார்ந்தான்.
"அவன் தான என்ன மொதல்ல கலாய்ச்சான்.." அகில் தன் நியாத்தைச் சொல்ல,
"பேசுனா பேசிகிட்டு இருக்கணும்.. அதென்ன அடிக்கிறது.." விக்ரம் ராகவ் பக்கம் சாய..
"சரி ப்ரியா விடு அகில். மொதல்ல அடிச்சதுக்கு சாரி கேளு. மச்சி நீயும் இனி கலாய்க்கிறத விடு.. எதுக்கு நீ எப்பவும் அவன டீஸ் பண்ற.." காமேஷ் நடு நிலையோடு சமதானத்திற்கு வந்தான்.
"சரி மச்சி நான் கலாய்ச்சேன் அடிச்சான்? மனோஜ் கலாசுன அடிப்பானா கேளு மச்சி..?" ராகவ் தன் ஒல்லிக் குச்சி கைகளால் மனோஜின் பருத்த உடலை குலுக்கி புஜங்களை நசுக்க,
"அடிங்க.. மவுண்ட் ரோட்ல அடி பட்ட தவக்கள மாதிரி படுக்க வெச்சுர மாட்டேன்.." கைகளை முறுக்கினான் மனோஜ்..
"ஏய்.." அகில் ஏதோ கோவத்தில் கத்த,
"என்ன ஏய்.. அடிங்க.. மனோஜ் லேசாய் பாய.."
"டேய்.. டேய்.. டேய்.. இருங்கடா.. அடச் சீ .. சண்ட அவனுகளுக்கு.. நீ என்ன நடுவுல.." என்று காமேஷ் மனோஜை கலாய்த்து விரட்டி,"மச்சி.. ராகவ் கிட்ட சாரி சொல்லி ப்ரியா விடு மச்சி. லெட் அஸ் பீ ப்ரெண்ட்ஸ்.." சிரித்தான்.
கோவத்தில் முகம் திருப்பினான் அகில்..
"மச்சி..!!?"
"சரி விடு மச்சி .. நானே கேட்கறேன்.. சாரி டா.. இனி உன்ன கலாய்க்கல."சட்டென சமாதானத்திற்கு வந்தான் ராகவ்..
அகிலால் அவ்வளவு சீக்கிரம் ஏனோ சமதானத்திற்கு வர முடியவில்லை.
முகம் திருப்பி விட்டம் பார்த்தான்..
"டேய்.. அவன் தான் கேட்டுட்டான் இல்ல.. உனக்கு என்ன அவ்வளவு திமிரு.. கேளு .." விக்ரம்.
'அவன் கிண்டல் பண்ணுனதால தான அடிச்சேன்.. கொஞ்சமா அசிங்கப் படுத்திருக்கான் .. நான் எதுக்கு சாரி கேட்கணும்'' என்று நினைக்க நினைக்க எரிச்சலும் கோபமும் பொங்கியது அகிலுக்கு.
"சாரி கேட்டு ப்ரியா விடுடா ரொம்ப சீன் போடாத " கும்பலே அகிலை நச்ச,
வெறுப்பில் சட்டென எழுந்தான், வழியிலிருந்த தன் பையை வேகமாய் எடுத்து விசிறி எரிந்து.. 'சாரி ' சொல்லி விட்டு கதவை வேகமாய் திறந்து மொட்டை மாடிக்குச் சென்றான்..
'"எல்லாம் ஓவர் திமிரு மச்சி.." ராகவின் தேய்ந்த குரல் கேட்டது..
அதைத் தொடர்ந்து ஒரு சிரிப்பு.. நிச்சயமாய் ராகவ் ஏதோ செய்திருக்க வேண்டும் நினைத்துக் கொண்டான் ..
'சாரி டா.. இனி உன்ன கலாய்க்கல' ராகவ் கொஞ்சம் முன் சொன்னதை எண்ணி வெறுப்பில் சிரித்தான்..
அகில் மொட்டை மாடிக்கு மெதுவாய் சிந்தித்தபடி போக, அர்ஜுன் கிதாருடன் வேகமாய் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்..
வகுப்பில் பார்த்திருக்கும் ஞாபகத்தில் அர்ஜுனைப் பார்த்து "ஹாய்"என்றான் அகில்.
எதோ அவசரத்தில் இருந்த அர்ஜுன், திருப்பிச் சொல்லவோ சிரிக்கவோ நேரமின்றி அவனைப் பார்த்தும் பதில் சொல்லாமல் வேகமாய் கடந்து போய்விட்டான்.
ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த அகிலின் பெட்ரோல் கிணற்றுக்குள் அது தீக்குச்சி கிழித்து போட..
"போடா.. பரதேசி நாய்களா.. ஒருத்தனும் என்ன மதிக்க வேண்டாம்.. போங்கடா.." சற்று சப்த்தமாகவே சொல்லி ஏரிக் கரையைப் பார்த்து அமர்ந்தான்..
கண்ணீரோடு
கவிதை கிறுக்கத் தொடங்கியது
அவன் மனம்..
"கனவுகளோடு வந்தவனை
கடப்பாரையில் குத்திக்
காயப்படுத்துகிறது கல்லூரி..
சந்தோஷத்தோடு வந்தவனை
சம்மட்டியில் அடித்துத் துவைக்கிறது இந்த
சமூகம்..
மனிதர்கள் மனிதர்கள்
சுற்றி சுற்றி
என்னைச் சுற்றி மனிதர்கள்..
போலி மனிதர்கள்..
பொல்லாங்கு மனிதர்கள்..
பொய் பேசும் மனிதர்கள்
பொய்யான மனிதர்கள்..
கேலிச் சிரிப்பில் திராவகம் தெளிக்கும்
மனிதர்கள்..
நீல விஷத்தின்
நெஞ்சம் கொண்ட
மனிதர்கள்..
நான் நேசிக்கும் மனிதர்கள் என்
நெருக்கத்தில் இல்லை..
என் நெருக்கத்தில் உள்ளவரை நான்
நேசிக்கவில்லை..
வலிக்கிறது
வாழ்க்கை..
வருத்தத்தில்
வழிகிறது என் நாட்கள்..
போதும்.. போதும்.. போதும்..
இந்த மனிதர்கள் போதும்..
இவர்களை என்னால்
பேசி வெல்ல முடியாது..
நான் நினைப்பதை எல்லாம்
இங்கே சொல்ல முடியாது..
காலமே! இன்னும் எத்தனை நாட்களுக்கு
என் கண்ணீர் கேட்கப் போகிறாய்..
என் நேசத்திற்குறிய நண்பர்களை என்று தான்
காட்டப் போகிறாய்?'
என்று??
அன்று அகிலுக்கு தெரியாது ..
இன்னும் எத்தனை நாட்களேன்று..
ஆனால் இன்று
விமானத்தில்
உட்கார்ந்திருந்த அகில் கணக்குப் போட்டான்..
ஆம்..
அன்றிலிருந்து சரியாக
நான்கு நாட்கள்..
தொடரும்..

No comments:
Post a Comment