Monday, March 31, 2014

...கற்க கசடற பகுதி 18



"அப்ப நீ கடவுள் இல்லைங்கிறியா?" காமேஷ் கேட்டான்

"அப்ப கடவுள் தான் உள்ளங்கைல இருந்து டார்ச் லைட் அடுச்சு சடார் னு இந்த பூமிய படச்சாருனு சொல்றியா?" அகில் திருப்பிக் கேட்டான் சட்டென..


"மச்சி ..நீ என்ன மச்சி சொல்ற ?" என்று காமேஷ் அர்ஜுனைப் பார்க்க,

"இவன பத்தி தெரியாதா மச்சி.. எல்லாம் பெரியார் கேங்..!" என்று தீவிர ஆன்மீகவாதியான அர்ஜுன் சொல்ல,

"அதனால தான் மச்சி கொஞ்சமாவது ரேஷனலா யோசிக்க முடியுது."  அகில் சொன்னான் தீவிரமாக..

இசை, பாட்டு, கவிதை, சினிமா, வெட்டி அரட்டை தாண்டி சில நேரம் அவர்கள் மொட்டை மாடியில் இது போன்ற அரட்டைகளும் தொடங்கி விடுவது உண்டு. அன்று மாலையும் அப்படித் தான் நாயர் கொடுக்கும் டீயை விட சூடாய் மொட்டை மாடியில் தொடங்கி விட்டது அந்த அரட்டை.

"அகில்.. நான் கடவுள் இந்த யுனிவர்ச படச்சாருனு சொல்லல.. இந்த யுனவர்ச படச்ச எனர்ஜி பேரு கடவுள்னு தான் சொல்றேன்.." அர்ஜுன் விளக்க முற்ப்பட்டான் பொறுமையாய்..

"ரெண்டும் ஒன்னும் தான் " அகில் சிரித்தான் கிண்டலாய்..

"இல்ல..ரெண்டுக்கும் ரொம்ப வித்யாசம் இருக்கு.. It was not preconceived that God will create Universe. This Universe was created by an Ultimate Energy and we call it as God.!" இது மாதிரி தான் டென்ஷனானால் அர்ஜுன் ஆங்கிலத்துக்கு தாவி விடுவது வழக்கம். வாசகர்கள் அவனைக் கொஞ்சம் பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

"ஓ .. அப்ப இந்த யுனிவர்ஸ்ச படைச்சது கடவுள் இல்ல.. அது நாமளா சும்மா நாச்சுக்கு வெச்சுக்கிட்ட பேரு! அப்புறம் எதுக்கு மச்சி அதுக்கு இத்தன கோயில், இத்தன கோடி செலவு, இத்தன அப்பாவி மக்களோட நேரம், வாழ்க்கை, பணம், நம்பிக்க வீணாக்கறது..? " கொஞ்சம் சீர்யஸாகிவிட்டான் அகில்..

"மச்சி. அது நாமளா சும்மா நாச்சுக்கு வெச்சுக்கிட்ட பேரு இல்ல. காத்து மாதிரி அது கண்ணுக்கு தெரியாதா எனர்ஜி. நீ எலெக்ட்ரிக்கல் ஸ்டூடண்ட்  தான? எலக்ட்ரிக்கல் எனெர்ஜிய கண்ணுல பாக்க முடியுமா?கடவுளும் அது மாதிரி தான்.. காட்டுன்னு உங்க ஆளு கேட்ட மாதிரி கேட்டா காட்ட முடியாது. அது மேல நம்பிக்க வை, பாக்கலாம்.."

"அடிங்க" அகிலுக்கு சிரிப்பு வந்து விட்டது.."இந்த நம்பிக்க, தும்பிக்க, காத்து மாதிரி, கரண்ட் மாதிரி பாக்க முடியாது, பீல் தான் பண்ண முடியும் னு இன்னும் எத்தன நாள் ஊர ஏமாத்துவீங்க.. உலகத்துல எவன் தொட்டாலும் கரண்ட் ஷாக் அடிக்கும், எவன் சுவாசிச்சாலும் காத்த உணர முடியும். அதுகள பாக்க முடிலைனாலும் எல்லாரும்,every single person in the world பீல் பண்ண முடியும். அதுகள பீல் பண்ண ஒரு நம்பிக்கையும் வெக்க தேவ இல்ல. நம்பிக்க வெக்காமா தொட்டா கூட கரண்ட் ஷாக் அடிக்கும். ஆனா கடவுள அப்படி எல்லாருமா பீல் பண்ண முடியுத? பல பேருக்கு பீல் பண்ண முடியலையே? ஒரு குழந்தைக்கு  காத்த சொல்லித் தர தேவையில்ல. சும்மா சுவாசிச்சாலே தெருஞ்சுக்கும். ஆனா கடவுள சொல்லித் தராமா அது தெருஞ்சுக்க வாய்ப்பே இல்ல..!! அப்புறம் எப்படி அது நேச்சுரல்.. எல்லாம் மேன் மேட் தான்.." அகில் கொக்கி போட்டான்..

"அப்ப இந்த உலகத்த எந்த எனர்ஜியும் உருவாக்கலைங்கிறையா?" அர்ஜுன் வலை விரித்தான்.

"ஆமாம் ..!"

"அப்புறம் எப்படி உருவாச்சாம் இந்த பூமி, இதுல லைப் எல்லாம் ..? உன்ன, என்ன பேசவெச்சுட்டு இருக்கே உயிர் னு ஒண்ணு அது எப்படி வந்துச்சாம்..?"

"அது தானா வந்துருக்கும் .. நீ சொல்லுவியே கடவுள் தானா வந்தாருனு அது மாதிரி தான்.. தெட் ஈஸ் கால்ட் நேச்சர் . அத தான் சைன்ஸ் கண்டு புடுச்சுட்டு இருக்கு. ஒரு நாள் அது முழுசா கண்டு பிடிக்கப் படும் போது உன் கடவுள் மொத்தமாவே இல்லாம போயிடும்." அகில் திருப்பி அடித்தான்.

"நான் எப்ப சொன்னேன் கடவுள் தானா வந்தாருன்னு.?" அகில் எதோ சொல்ல வருவதற்குள் அர்ஜுனே மறுபடி தொடங்கினான்  "சரி அத விடு.. என்ன சொன்ன? 'தானா வந்துருக்குமா..?'" நக்கலாய் சிரித்தான் அர்ஜுன் " உன்னால சரியா எக்ஸ்ப்ளைன் பண்ண முடியல இல்ல.. இன்னும் உன் மெட்டீரியல் சைன்ஸ் கூட அத கண்டு பிடிக்க தான தெணருது ? அத முழுசா எக்ஸ்ப்ளைன் பண்ண உருவாக்கினது  தான் ஆன்மீகம். ஆன்மீகம் ஒரு மிகப் பெரிய சைன்ஸ்..Spiritual Science. உன் சைன்ஸ விட ஆன்மீகத்துனால அத தெளிவா விளக்க முடியும்."

"ஹ..ஹா.... கருங்கல் சிலைக்கு பால் அபிஷேகமும், தேன் அபிஷேகமும் பண்றதும்,காசிக்கும், மெக்காவுக்கும் போறேன்னு கூட்டத்துல நசுங்கி செத்து போறதும், மதம் மாறச் சொல்லி அப்பாவி மக்கள ஏமாத்தறதும் தான் சைன்சா?" அகில் சிரித்தான்.

 "மச்சி.. நீ சொல்றது  ஐடல் ஒர்ஷிப், பக்தி மார்க்கம். அது ஆன்மீகத்துல ஒரு பார்ட் தான். ஆன்மீகத்துல அது தாண்டி எவ்வளவோ விஷயம் இருக்கு.. நான் சொல்ல வரது வேற. Material Science ஊம் ..எப்படி சொல்றது?..பொருள் அறிவியலால மட்டும் இந்த அண்டத்த எப்பவும் புருஞ்சுக்க முடியாது.. எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணிட முடியாது தெருஞ்சுக்கோ.!" என்று சாந்தமாய் தொடங்கிய அர்ஜுன் கொஞ்சம் தீவிரமானான்,

 "நான் சொல்றது அத்வைத்தம், சித்தர்கள் சொல்லுவாங்களே ஞான மார்க்கம் அது..! அத பொறுத்த வரைக்கும் ஆன்மீகங்கறது தேடல், தன்னை உணர்தல், உனக்குளிருந்து உன்னை வாழவைக்கிற உயிர் அதை உணர்தல், அது மூலமா இந்த உலகத்தை அறிதல், அண்டத்தை உணர்தல். அதுல சாமியும் கெடையாது பூசையும் கெடையாது. that's mere science. call it spiritual science or whatever you want. it's a Science." கொஞ்சம் மூச்சிரைத்தான் அர்ஜுன்.

காமேஷும், அசோக்கும் அவர்கள் பேச்சை ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தனர். அசோக் இது போன்ற நேரத்தில் அதிகம் பேசுவதில்லை.. எல்லாம் பேசி முடித்த பிறகு கடைசியில் ஒரு பன்ச் கொடுப்பதோடு சரி. அந்த வரலாற்று முக்கியத்துவமான பன்ச் கடைசியில் வரும்.. அதுவரை வாசகர்கள் வெய்ட் ப்ளீஸ்..!

"என்ன மச்சி.. கார்ப்பரேட்சாமியார் மாதிரி, spiritual science னா, மெடிட்டேஷன் பத்தி சொல்லப் போறியா.?" சிரித்தான் அகில்.

"அந்த கம்மனாட்டி நாய்கள எதுக்கு இழுக்கற இப்ப தேவ இல்லாம.. இத சொல்ல எந்த எச்சக்கலையும் தேவ இல்ல.. அவுனுக முன்னாடி உக்காந்துக்கிட்டு கண்ண மூடி பஜன பாடறதுக்கும், தியானம்னு நீ கண்ண மூடி உட்காந்திருக்க அவன் இன்னைக்கு எந்த பிகர கரக்ட் பண்ணலாம்னு பாத்துட்டு இருக்கறதுக்கும்.. சே..!!" ரொம்பவே டென்ஷனாகி விட்டான் அர்ஜுன்.."உனக்கு நாலு எழுத்து படிக்க தெரியுமில்ல.. ஒன்னும் படிக்கத் தெரியாத illiterate இல்லையே. படி.. கொஞ்சம் மூளைய பயன்படுத்து,யோசி ,தேடு அது தான் ஆன்மீகம் !"

சட்டென அர்ஜுன்  ஏதோ பெரியார் புக்கைப் படித்து விட்டு பேசுவது மாதிரி இருந்தது அகிலுக்கு. அதை அவன் சொல்ல வருவதற்குள் அர்ஜுனே தொடர்ந்தான்,

"அறிவியல், யுனிவர்ஸ்கான எக்ஸ்ப்ளனேஷன வெளிய இருந்து தேடுது. ஆன்மீகம், உனக்கு உள்ள இருந்து தேடுது. "தி கிராண்ட் டிசைன்" ஸ்டீவன் ஹாக்கிங் புக் படுச்சுருக்கியா? இந்த யுனிவர்சோடா டிசைன் என்ன? Small particle called Planets revolving around a big particle called Sun in an orbit. சரியா? கண்ணுக்கே தெரியாத ஒரு சின்ன ஆட்டமோட டிசைன் என்ன? எலெக்ட்ரான் என்ன பண்ணுது ?"

'அட ஆமா இல்ல' அகிலுக்கே அந்த ஒற்றுமை ஆச்சர்யமாக இருந்தது.

"என்ன?ஒரே மாதிரி ரெண்டும் இருக்கேன்னு யோசிக்கிறையா? இந்த யுனிவர்சோட டிசைன போட்டவன் நம்மள மாதிரி ஒரு சோம்பேறின்னு நெனைக்கிறேன். உத்துப் பாத்தா எல்லாம் ஒரே டிசைன் தான். இந்த யுனிவர்ச இயக்குதே ஒரு எனர்ஜி நீ சொன்னியே 'தானா உருவாச்சுங்கிற எனர்ஜி ' அது தான் உன்னையும் என்னையும் பேசவைக்குது, சிரிக்க வைக்குது. ஒரு ப்ளூ வேல்ல இருந்து, இதா இந்த சின்ன எறும்பு வரைக்கும், இந்த யுனிவர்சோட மோஷன்ல இருந்து ஒரு சின்ன எலக்ட்றாநோட மூவ்மண்ட் வரைக்கும் எல்லாம் ஒரே என்ர்ஜியோட வெவ்வேற பார்ம் தான். அதனால் தான், சைன்ஸ் யுனிவர்ச புரிஞ்சுக்க வெளிய தேடப் போனப்ப ஆன்மீகம் நமக்குள்ளேயே தேடுச்சு.  because you are made up of a similar design with same energy which made this Universe. இது தான் ஆன்மீகம்."

"அந்த யுனிவர்சல் எனர்ஜிக்கு மனுஷன் வெச்ச பேரு தான் கடவுள்..அந்த எனர்ஜிய உணர்ந்துக்கறது தான் ஆன்மீகம்.பொருளையும், பணத்தையும் குவிச்சு வெச்சுக்கிட்டு அதுல உன்ன தேடாத.. உன் பொருளிடம் மட்டும் அல்ல உன்னிலிருந்தும் நீ விலகி  நில்.. உன்னை எது இயக்குது னு  கூர்ந்து கவனித்துப் பார்ன்னு சொல்லுவாங்களே அது !! உன்ன முழுசா உணர்ந்துகிட்டா இந்த அண்டத்த உணருவது ஒரு பெரிய விஷயம் இல்ல. ஏன்னா ரெண்டும் ஒரே டிசைன் தான். அது தான் முக்தி, ஞானம்.  இத சொல்றது தான் ஆன்மிகம்." என்று அர்ஜுன் பிரசங்க உரை போல் பேசி முடிக்க காமேஷுக்கும், அசோக்கிற்கும் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

அகிலுக்கு ஆர்வமாய் இருந்தது. வழிபாட்டை மறுதலித்த ஆன்மீகத்தின் வேறு ஒரு கோணம் ஈர்த்தது அவனை. கண்டிப்பாக இதைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் நாத்திகம் பேசுவது, எல்லோரும் போகிறார்களே என்று கோயில் போவதற்கு சமம் என நினைத்தான். இருந்தும் அவன் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்ததாய் தெரியவில்லை.

"நீ சொல்றதெல்லாம் சரி தான் மச்சி. உண்மைலயே எவனாலும் விளக்க முடியாத யுனிவர்சல் எனர்ஜி பத்தி பேசுற ஆன்மிகம் மிகப் பெரிய சைன்ஸ் தான். ஆனா இப்ப இந்த ஞான மார்க்கத்த யார் மச்சி பேசறது? இப்ப ஆன்மிகம்னா நீ சொன்னியே பக்தி மார்க்கம், கோயில், அங்க வேண்டுறதே, 'கடவுளே.. மினிஸ்ட்டருக்கு பத்து கோடி லஞ்சம் குடுத்து இந்த காண்ட்ரெக்ட் எடுத்துருக்கேன் .. இதுல மட்டும் நூறு கோடி சம்பாதுச்சிட்டேன்.. அதுல அஞ்சு கோடி உனக்கு னு' பிஸ்னஸ் தான நடக்குது. இங்க எங்க வருது 'உன்னிலிருந்தே நீயே விலகி நிக்கற ' ஆன்மிக கான்சப்ட் .! இத தான மச்சி பெரியார் எதிர்த்தாரு. இந்த ஆன்மிகம் நாட்டுக்கு தேவையா?இதுக்கு நாத்திகமே பரவாயில்ல இல்ல" அகில் கேட்டான்.

"மச்சி.. நான் அப்பவே சொன்னேன் அது பக்தி மார்க்கம்.. எல்லா மக்களும் ஞான மார்க்கத்த புருஞ்சுக்க முடியாது.. அதற்கான ஒரு முதற்படி தான் பக்தி.."

"ஆனா மொத படில இருந்து இன்னும் யாரும் ஏரி வந்த மாதிரியே தெரிலையே மச்சி.. படிலையே ஒக்காந்து பிச்ச தான எடுக்கறாங்க..! இல்ல  கீழே எறங்கி மறுபடியும் காட்டு மிராண்டி ஆகறாங்க?.." ஆன்மிகங்கற பேருல என்ன தான் மச்சி நடக்கல இந்த நாட்டுல, ஏன் உலகத்துலையே எடுத்துகோயேன்?" அகில் சோகமாய் கேட்டான்.

"இங்க பாரு நான் ஆன்மிகத்தோட கான்சப்ட் பேசும் போது நீ ஏன் சோசியல் இஸ்யு பத்தி பேசற..? அது ஒரு சில பேரால ஏற்பட்ட பிரச்சின.. அதுக்கு ஆண்மிகத்த குறை சொல்லுவியா? நீ கேட்கறது எப்படி தெரியுமா இருக்கு.? நம்ம கிளாசுல பவர் பிளான்ட் பத்தி பாடம் எடுக்கும் போது.. ஏன் தமிழ் நாட்ல கரண்டே இல்ல னு கேட்கிற மாதிரி இருக்கு..?" அர்ஜுன அகிலை மடக்கினான்.

"அப்படி கேட்காததால தான் மச்சி நம்ம நாடும் வெளங்கல.. ஆன்மிகமும் வெளங்கல . அப்ப பக்தி மார்க்கம்னு  பேர வெச்சுக்கிட்டு மக்கள ஏமாத்துவாங்க.. நாங்க கான்சப்ட்ட மட்டும் பாத்தட்டு ஒத்துக்கணும். நீ சொன்ன ஆன்மிகத்தோட நிலை  இப்ப எப்படி இருக்குனு தான மச்சி பாக்கணும்? உண்மைலயே கஷ்ட்டப் பட வேண்டியது நான் இல்ல.. நீ.! அவ்வளவு பெரிய சைன்ஸ ஒழிச்சு கட்டிட்டு  இப்படி ஆன்மிகத்த பிசினஸ் ஆக்கிட்டாங்களேன்னு.. " அகில் சடார் என கேட்க, உண்மையிலேயே தடுமாறி விட்டான் அர்ஜுன்.

கொஞ்சம் சுதாரித்து  "இப்ப பக்தி மார்க்கம் பிசினஸ் ஆச்சு.. பக்தி மார்க்கம் பிசினஸ் ஆச்சு.. னு ஏன் இப்படி குதிக்கற..? அதுல என்ன தப்பு? அது மக்களோட நம்பிக்க..? " அர்ஜுன் சொல்ல,

"எது? சாமிக்கு கமிஷன் வெட்டுனா மாட்டிக்காம கோடி கோடியா திருடலாங்கறதா?" என்று அகில் கேட்க,

"அது அவனோட நம்பிக்க. அவனோட தப்பு..இன்னும் சொன்னா அவன் நம்பிக்கையோட தப்பு " என்று அர்ஜுன் பதில் கொடுக்க,

"சூதாட்டத்துல, குதிர ரேஸ்ல வின் பண்ணி கோடீஸ்வரன் ஆகலாம்னு நெனைக்கறதும் கூட ஒரு நம்பிக்க தான்.. அங்க என்ன மக்கள் நம்பிக்கையவா தப்பு சொல்ற, சூதாட்டத்த தான தப்பு சொலற." விவாதம் சூடாக,

சட்டென தூக்கக் கலக்கத்திலிருந்து எழுந்தவனாய் அசோக் இடைமறித்து..

"இப்ப என்ன டா ..? உனக்கு கடவுள் இல்ல அவ்வளவு தான ..? சரி இல்ல..!!  உனக்கு என்ன? இருக்காரு அவ்வளவு தான? கண்டிப்பா இருக்காரு..!" என்று பஞ்சாயத்துக்கு முடிவு கட்டி,

"மணி ஒன்பதாச்சு.. இன்னும் பத்து நிமிஷம் லேட்டா போனா ஆந்திரா மெஸ் மூடிருவான். அப்புறம் எந்த எனர்ஜியும் நமக்கு நைட் சோறு போட முடியாது.. வாங்க டா போலாம்.." ஆவேசமாய் கிளம்பினான்.

அகிலும், அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.. கொஞ்ம் கூட சண்டை போட்ட சுவடே இல்லாமல் சிநேகமாய் சிரித்துக் கொண்டு கிளம்பினர்.

அசோக் ஒரு மாபெரும் பட்டிமன்றத்துக்கு தீர்ப்பு சொன்ன சாலமன் பாப்பைய்யா மாதிரி முன்னோக்கி நடந்தான், காமேஷிடம் கேட்டபடி, "மச்சி ஆந்திரா மெஸ்ல எப்ப பிரியாணி போடுவாங்க..?"


தொடரும்..

No comments:

Post a Comment