Monday, March 31, 2014

...கற்க கசடற பகுதி 16



"Can i get a cup of Tea please..!" விமானத்தில் அகில்..

"Sure  Sir" ஏர் ஹோஸ்டஸ் கொடுத்தாள் ஒரு கப், ஒரு டீ பொட்டலம், மைக்ரோ சைசில் ஒரு சர்க்கரை பேக்கட், கருத்தம்மா படத்தில் கொடுத்த கள்ளிப் பால் அளவுக்கு சின்னதாய் ஒரு குப்பியில் கொஞ்சம் பால்..

"Can I get some more sugar please.."


சப்பாத்தி, பூரிக்கு சர்க்கரை தொட்டுக் கொள்ளும் பாப்பாவைப் பார்ப்பது மாதிரி பார்த்தது, "Sure Sir" கொடுத்தாள் ..

"நாயர் ரெண்டு டீ.. ஒரு பிஸ்கட் எடுத்துக்கறேன்..! அகில் உனக்கு எதாவுது வேணுமா..?" மணி நாயர் டீ ஸ்டாலில் காமேஷ்..

"இல்ல மச்சி எனக்கு எதுவும் வேண்டாம்.."

"அடப் போ மச்சி நீ வாழ்க்கைல ஒரு சூப்பர் டேஸ்ட்ட மிஸ் பண்ற..!" காமேஷ் சரித்தான்..

நினைத்தபடியே அகில் விமானத்தில் டீயை உறிஞ்ச,

"த்தூ...!!"

சென்னைல எறங்குன ஒடனே நாயர் டீ கடைக்கு போய் ஒரு டீயக் குடுச்சுத் தான் பாக்கணும் நினைத்துக் கொண்டான்..

புது வீடும், புது சூழ்நிலையம் கொஞ்சம் பழக்கப் பட, பஸ்ட் கீரிலிருந்து, மூன்றாவுது கீர் மாற்றப்பட்ட வண்டியாய் வேகம் பிடித்தது வாழ்க்கை..

மோட்டார், ஜெனரேட்டர், ஆல்ட்டர்னெட்டர் என்று அகிலும், அர்ஜுனும் மண்டை உடைக்க,

ஆப்ஜெக்ட் ஒரிஎண்டெட் பிரோக்ராம்மிங், ஜாவா ஸ்கிரிப்ட் என்று காமேஷ் கண்கள் பிதுங்க,

கல்லூரியின் எட்டு மணி நேரம்
அதுவும்
வகுப்புகள் நடக்கும் ஏழேகால் மணி நேரம் தவிர,
அவர்களுக்கு
வாழ்கை ரொம்பவும் சுவாரஸ்யமாகவே சென்றது..!

லட்சம் இருந்தது விஷயம் அவர்கள் பகிர்ந்து கொள்ள..

"மச்சி.. மனுஷ்ய புத்திரனோட 'கால்களின் ஆல்பம் ' கவித படுச்சேன் மச்சி.. சே.. வாய்ப்பே இல்ல..!"

"யாநியோட ப்ரில்யூட் நோஸ்டால்ஜியா கம்பைண்ட் வெர்சன் கேட்ருக்கியா? அப்பா என்ன ஒரு மியுசிக் மச்சி.. டிவைன் நு சொல்லுவாங்களே..!"

"மச்சி.. நீ பல்ப் பிக்சன் படம் பாத்துருக்கியா? குவண்டின் டேரான்டினோ வோடது.. என்ன ஒரு ஸ்க்ரீன் ப்ளே. என்ன டைரக்ஷன்..!"

என்று யாரோ ஒருவர் எதோ ஒரு டாப்பிக்கிற்கு முதல் புள்ளி வைக்க, மாலையில் மொட்டை மாடியில் தொடங்கி விடும் அந்த சுகமான அரட்டை.

அவ்வப்போது சென்னிமலை அசோக்கும் பக்கத்துத் தெருவில் ரூம் எடுத்து தங்கி இருந்ததால் அவர்களோடு வந்து கலந்து கொண்டான்..

காமேஷ், அசோக்கை அவன் மொக்கைக்கு எல்லாம் சளைக்காமல் கிண்டல் அடிப்பதும், அதற்க்குக் கொஞ்சமும் கலங்காமல் அசோக் சமாளிப்பதும் அவர்கள் மாலைப் பொழுதை இன்னமும் மகிழ்சியாக்கியது..

"இன்னைக்கு உன்னோட சுவீட் டார்லிங் உமா மகேஸ்வரி , என்னை கிளாஸ் விட்டு வெளிய போக சொல்லிடுச்சு மச்சி.. " அசோக் முதல் புள்ளி வைத்தான் அன்றைய டாப்பிகிற்கு.

"உமா வா? அவ ரொம்ப நல்ல டைப் ஆச்சே.. சென்னிமல நீ எதா பண்ணிருப்ப..!" காமேஷுக்கு  உமாவின் அழகு முகம் ஒரு முறை வந்து போனது..

"பாத்து மச்சி.. கரக்ட் பண்ணிட போற.. ஆள் சூப்பரா இருந்தாலும் அது சரியான சிடு மூஞ்சி.." அசோக் சிரித்தான்.

"அட நாதாரி..அது கிளாஸ் எடுக்கிற மேடம் டா. நீ எல்லாம் திருந்தவே மாட்டியா.?" அதிர்ச்சியானான் அர்ஜுன்..

"ஊம்.. கிளாஸ் ல கூட படிக்கறதெல்லாம் அட்டா இருந்தா அப்புறம் என்ன மச்சி பண்ண..?" அசோக்  பாவமாய் கேட்க,

"அதே தான் மச்சி..இவுங்க மட்டும் வெவரமா இருப்பாங்க! நம்ம சைட் அடுச்சா பொறுக்காதே.." சமயம் பார்த்து கோல் அடித்தான் அகில்..

"டேய்.." அர்ஜுன் கண்கள் சுருக்கி அகிலைப்  பார்க்க,

அகில் "என்ன மச்சி..கரக்கட் தான..?" காமேஷிடம் சப்போர்ட் கேட்க,

சட்டென்று சைலன்ட் மோடிற்கு சென்று விட்டான் காமேஷ்.

இது அவர்கள் சந்தித்த முதல் நாளிலிருந்தே நடப்பது தான்..

காமேஷை அர்ஜுனும், அர்ஜுனை காமேஷும் எப்போதும் நேரடியாக கிண்டல் அடித்துக் கொள்வதே இல்லை.. கல்லூரி நட்பு என்னும் இலக்கணத்திற்கு மாறாய் மிகுந்த மரியாதையாய் இருந்தது அவர்கள் நட்பு. அகிலுக்கு அது ஆச்சர்யமாக இருந்தாலும் ஒரு நாளும் கவலைப் பட்டதில்லை..

"அகில் நீ ரெண்டு நாள் முன்னாடி எதோ தமிழ் சங்கத்துல ஒரு பொண்ணு இருக்கு.. பாக்கப் போறேன்னு  ஓவர் சீன் போட்டுட்டு இருந்த என்ன ஆச்சு? ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கற..?" காமேஷ் சீண்டினான் அகிலை..

இரண்டு நாட்களுக்கு முன்...

"மச்சி நம்ம காலேஜ் தமிழ் மன்றத்துல புதுசா ஒரு பொண்ணு சேர்ந்துருக்காம் மச்சி.. பேர் கயல்விழியாம்.. நல்ல பேரு இல்ல.." ஆனந்தத்தில் அகில்..

"ஓ..! என்ன டிபார்ட்மெண்ட் மச்சி..?" காமேஷ்

"கெமிக்கல் எஞ்சினியரிங் டிபார்ட்மெண்ட் போல..கவிதை எல்லாம் எழுதுமாம்.. தமிழ்ல பயங்கர ஆர்வம்..! எதோ கவிதை எழுதிருக்காம், நம்ம காலேஜ் மேகசின்ல போடணுமாம், நம்ம தமிழ் மன்ற செகரட்ரி கணேசன் இல்ல அவன் தான் நாளைக்கு லஞ்ச்ல போய் பர்ஸ்ட் இயர் கிளாஸ்ல பாக்கச் சொன்னான்.."

கேப் கொடுக்காமல் அகிலே தொடர்ந்தான், "இந்த காலத்துல தமிழ் ஆர்வம்.. கவித எழுதத் தெரியும்.. அதுவும் ஒரு பொண்ணு இவ்ளோ ஆர்வமா  இருக்குனா சூப்பர் இல்ல மச்சி.." சந்தோஷத்தில் உடம்பெல்லாம் புல்லரித்தது அகிலுக்கு..

"ஊம்.. ஆமா.. ஆமாம்.." பெரிதாய் ஆர்வம் காட்டாமல்  தலை ஆட்டிய காமேஷ் மேல் அகிலுக்கு ஆத்திரமாக வந்தது..

'இருக்காத பின்ன எல்லாம் பொறாம'  அவனே நினைத்துக் கொண்டு அதிகம் பேச்சுக் கொடுக்காமல் கிளம்பினான்.. அவனுக்குக் கனவு காண ஏராளம் இருந்தது..

தமிழ் ஆர்வம்
கவிதை
புலமை..

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட ஐஸ்வர்யா ராய் மாதிரி இருப்பாளா?'அகிலின் இதயத்துக்குள் புகுந்து கிச்சு கிச்சு செய்ததது ஹார்மோன்..

'சே சே.. அதெல்லாம் ஓவர்.. சுமாரா ஒரு கவிஞர் தாமரை மாதிரி இருந்தா போதும்..!'

காய்ந்து கிடந்த தமிழ் சங்கத்துகுள்..

(ரொம்ப நேரம் யோசித்து
கா' னா வுக்கு கா' னா  போட்டான்..)

கார் மேக மழையாய் வந்த
கயல்விழி..!!

(அடடா.. கவித.. கவித ..! வேறு யாரும் அல்ல அவனே சொல்லிக் கொண்டான்..!)

"Hi I'm Akhil.. actually Ganesan Sir sent me to .. "

'சே..! அதுவே தமிழ் ஆர்வமான பொண்ணு,.எதுக்கு இங்கிலீஸ்ல சீன் போடணும்..!!.'

"நான்.. அகில்.. கணேசன் ஐயா தங்களைப் பார்க்கச் சொல்லி .."

'த்தூ..இது அத விட கேவலமா இருக்கு..'

'ஹாய்.. நான் அகில், ஆக்சுவலி கணேசன் சார் உங்ககிட்ட..'

பலத்த ஒத்திகைக்கு பிறகு 'ஊம்.. இது ஒகே..' முடிவெடுத்த படி அகில் நடந்து சென்றான் கெமிக்கல் எஞ்சினியரிங் டிபார்ட்மெண்ட் நோக்கி..

வெளியே இருந்த ஒருவனிடம் விசாரித்தான்.

"உள்ள இருக்காங்க.." வழி காட்டினான் அவன்.

சட்டென கிளாஸ் ரூமுக்குள் நுழைந்த அகில் உள்ளே மேடம் இருத்ததை சில நொடிகள் கழித்தே கவனித்தான்..

"ஓ.. சாரி மேடம்.. எக்ஸ்கியூஸ் மீ.." பதற்றமானான்..

"இட்ஸ் ஆல் ரைட்.. கம் இன்.." மேடம் அழைக்க உள்ளே போனான்..

'கயல்விழி...' அந்த முகத்தை வகுப்பறையில் அமைதியாய் உட்கார்ந்திருந்த கூட்டத்தில் தேடினான்..

"கணேசன் சார் அனுப்புனாரா பா?" மேடம் கேட்க பகீர் என்றானது அகிலுக்கு.

"எஸ் மேம்.."திறு திறு வென்று விழித்தான்..

"வா பா.. இங்க வா.." கேர்ல்ஸ் சைட் ரோவைப் பார்த்து வழிந்து கொண்டிருந்த அகிலை மேடம் அழைத்து,

"காலேஜ் மேகசின்ல போடறதுக்கு சார் கிட்ட இந்த கவிதைய குடுத்துடு " என்று  கவிதையைக் கொடுக்க.. படீர் என்று என்னமோ வெடித்தது அகிலின் இதயத்துக்குள். லேசாய் தடுமாறி நிதானத்திற்கு வந்தான்.

'எங்கள் வீட்டுப் பூனைக் குட்டி..!' கவிதைத் தலைப்பைப் பார்த்தான்.. மேடத்தைப் பார்த்தான்.. நரைத்த தலையை மறைக்க டை படாத பாடு பட்டிருந்தது. சரியாகச் சொன்னால் படாத பாடு படுத்தப்பட்டிருந்தது ..

நாட்டுக்கு ரொம்பத் தேவ..! மனசுக்குள் நினைத்துக் கொண்டான்..

"உனக்கும் கவிதைல ரொம்ப இன்டிரெஸ்ட்டா..? சார் சொன்னாரு தமிழ் மன்றத்துல ரொம்ப ஆக்டிவ்வா இருக்கியாம்மே..குட்..கீப் இட் அப்..!!"

"தேங்க்ஸ் மேம்.." ஆர்வமில்லாமல் தலை அசைத்தான்..

"ஸ்டுடண்ட்ஸ்.. சீ ஹியர்.. இப்படித் தான் அகாடேமிக்ஸ் தாண்டி மற்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்லையும் ஆக்டிவா இருக்கணும்.." ஏ.ஆர். ரகுமானுக்கு அவார்ட் கொடுக்கும் ஆஸ்க்கர் கமிட்டி மாதிரி மேடம் பாராட்டினாலும், அகிலுக்கு எரிச்சலாய் வந்தது..

'அடிங்க.! மத்தியானம் லஞ்ச டைம்ல சரியா சாப்படக் கூட விடாம இவ ஸ்பெஷல் கிளாஸ் எடுக்றதே பெரிய மொக்க.. இதுல உன்னால எங்களுக்கு அட்வைஸ் வேறைய.. மவனே வெளிய வா பேசிக்கறேன்..' என்று கடைசி பெஞ்சின் மைண்ட் வாய்ஸ் தெள்ளத் தெளிவாய் கேட்டது அகிலுக்கு..

அதனாலோ என்னவோ "தேங்கியூ மேம்.. ஐ வில் கிவ் இட் டூ கணேஷ் சார்.."அவசரமாய் கிளம்பினான் அங்கிருந்து..

'அடப்  பரதேசி கணேசா..! பர்ஸ்ட் இயர் கிளாஸ் போய் பாருன்னு சொன்னியே.. அது பர்ஸ்ட் இயர் கிளாஸ் எடுக்கற மேடம்னு  ஒரு வார்த்த சொன்னியா டா..? நாதாரி..' மனசுக்குள் திட்டிக் கொண்டு எரிச்சலோடு திரும்பினான் அகில்..

கையில் இருந்த காகிதம் பிரித்து கவிதையை வாசித்தான்..

"எங்கள்  வீட்டுப்  பூனைக் குட்டி.. - அது
சாம்பல் நிறத்துச்
சர்க்கரைக் கட்டி..!
வாலை ஆட்டும் அழகுச் சுட்டி..-அது
எங்கும் ஓடும் வீட்டைச் சுற்றி..!!"

 அதற்கு மேல் அவனால் படிக்க முடியவில்லை..

பத்திரமாய் மடித்து கணேஷ் சாரிடம் கொடுத்து விட்டான்.

"என்னது..? கயல்விழிங்கறது தல நரச்சுப் போன நாப்பது வயசு ஆண்டியா..? நான் கூட பேரப் பாத்து ஏமாந்துட்டேன் மச்சி.." காமேஷ் சிரித்தான் மொட்டை மாடியில் சப்த்தமாய்..

"ஓ..! அதனாலத் தான் நீ எங்கிட்ட கூட சொல்லலையா.." அர்ஜுன் சிரித்தான் தலையில் கை வைத்துக் கொண்டு..

"ஓ மை காட்.. சோ சேட் மச்சி.. நீ ஒன்னும் பீல் பண்ணாத " வடிவேலு ஸ்டைலில் சொன்ன அசோக்கை கொலை வெறியோடு பார்த்த்தான் அகில்..

"மச்சி.. அது என்ன கவித? பூனைக் குட்டி பத்தி..? நீ படுச்சிருப்பியே..?" நக்கலாய் கேட்டான் காமேஷ்..

அகில் கவிதையை சொல்ல,
முடியாமல் சிரித்தனர் அனைவரும்..

"மச்சி.. இத அந்த கணேசன் வேற ரொம்ப நல்லா இருக்கு இல்லனு எங்கிட்ட கேட்கறான்..? நான் என்ன மச்சி சொல்ல..?!" கடுப்பில் கேட்டான் அகில்

"ஏன் மச்சி.. இதுக்கு என்ன..? அது நம்ம காலேஜோட சரோஜினி நாயுடு மச்சி. உனக்குத் தான் புரியல." காமேஷ் சிரிக்க, பீரிட்டுக் கொண்டு வந்தது சிரிப்பு அனைவருக்கும்..

"அனிதாவுக்கும் பூனக் குட்டி னா ரொம்ப பிடிக்கும் மச்சி.." அதி பயங்கர ஆர்வத்தில் சொன்னான் அசோக்..

"அனிதா யாரு?" வாசகர்களே தயவு செய்து கேள்வியை அசோக்கிடம் கேட்டு விடாதீர்கள். நானே சொல்கிறேன்.

அனித்தா அசோக்கின் காதலியாம். இருவரும் பன்னென்டாம் கிளாசில் விழுந்து விழுந்து,அடி படாமல் தான், காதலித்தார்களாம்.. அந்த காதலால் தான் அசோக்கிற்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லையாம்.. அதனினும் கொடுமை அனிதா தான் முதலில் துரத்தி, துரத்தி அசோக்கை காதலித்ததாம்.. போனால் போகட்டும் என்று இவர் வாழ்க்கை கொடுத்த்தாராம்.. இதெல்லாம் அசோக் மூச்சுக்கு முன்னூரு முறை சொல்லும் கதை..  அனிதா.. சினேகா போலவே இருப்பாளாம் இது கதையின் அடிஷனல் ஷீட்..ஆனால் சென்னிமலையில் பீட்சா ஹட் இருப்பது மாதிரியே இதிலும் எவ்வளவு உண்மை என்பது யாருக்கும் தெரியாது..!

"மச்சி அனிதாவுக்கு பன்னிக் குட்டியும் ரொம்ப பிடிக்குமோ?" காமேஷ் சீரியசாய் கேட்க,

"தெரியலயே மச்சி.. ஏன்.?" அசோக் நெற்றி சுருக்கினான் ..

"இல்ல மச்சி உன்ன பிடிச்சிருக்கே அதனால கேட்டேன்..!!" காமேஷ் முடிக்க,

 விழுந்து, புரண்டு சிரித்தனர் அகிலும், அர்ஜுனும்..

"மச்சி.. என்னா டைமிங் மச்சி.." காமேஷுக்கு ஹய் பை தட்டினர் இருவரும்..

"சாரி மச்சி.. கோவ்சுக்காத.. சும்மா தான் .. விளையாட்டுக்கு" உண்மையிலேயே கஷ்ட்டப் படுத்தி விட்டோமோ என்று எண்ணி சமாதானப் படுத்தினான் காமேஷ்..

"சே சே.. மச்சி.. ஒன்னும் பிரச்சன இல்ல.. காதல்ல விழற வரைக்கும் இப்படித் தான் கிண்டல் பண்ணுவீங்க.. காதல் வந்துட்டா எல்லாம் என்ன மாதிரி அமைதி ஆய்டுவீங்க.. லவ் பண்றதுக்கு முன்னாடி நான் பண்ணாத கேலியா.. கிண்டலா??" ஆண்டு அனுபவித்த அப்பத்தா மாதிரி மொக்அசோக் மொக்கை போட,

"என்ன மச்சி.. நீ லவ் பண்ணுனியா?? இல்ல அறுபதாங் கல்யாணம் பண்ணுனியா?" உன்னை எல்லாம் கிண்டல் பண்றதுல தப்பே  இல்ல டா  என்று மொத்தமாய் போட்டுத் தள்ளினான் காமேஷ்.

'அழகூரில் பூத்தவளே..' அர்ஜுன் மொபைல் சினுங்கியது..

லேசாய் ஒரு பொறமை பார்வையில் "போங்க சார். போங்க.." சிரித்துக் கொண்டே கிண்டலாய் ஒதுங்கி வழி விட்டான் அகில்..

அப்போது தான் வந்தது அந்த கவிதை வரி அகிலுக்கு..

"என் தொலைபேசியிலும்
பெண் பெயர் கொண்ட
எண் ஒன்று கேட்டேன்...!!"

No comments:

Post a Comment