வாழ்க்கைப் பாதையில்
வசந்தமாய்
வந்து போன
ஒரு பருவம்..!
நேற்றைய கண்ணீரும்
நாளைய பயமும்
இன்றைய பொழுதை
இம்சிக்காத பருவம்..!
அழகை
அழகாய் பார்த்து ரசித்து..
பார்த்ததை எல்லாம்
அழகாய் ரசித்து..!
பருவக் குறும்பில்
பொங்கி நுரைத்து..
சுடிதார் நிறத்தில்
சுகமாய் நனைந்து..
ரசித்து ரசித்து
இதயம் தொலைத்து..
தொலைத்து தொலைத்து
மீண்டும் ரசித்து..
கிலோ கணக்கில்
கலர் கலராய்
கனவுகள் சுமந்து..
சுதந்திர வானில்
சிறகு விரித்த பருவம்..!
கல்லூரிக் குடுவைக்குள்
வார்த்தையாகவோ
வண்ணமாகவோ
சப்தமாகவோ
சிந்தி விழுந்து
காவியமாகவோ
ஓவியமாகவோ
இசையாகவோ இல்லை
வெறும் வசையாகவோ
மாறிப் போகிற
மாயப் பருவம்..!
இந்த
சுகமான பருவத்தில்
தூரிகை
நனைத்து
முதல் புள்ளி
வைக்கிறேன்..
இந்த கிறுக்கலின் இடையே
சின்னதாய் ஒரு கதை சொல்லி..
கதையோடு
கொஞ்சம் நிஜம் சொல்லி ..
இத்தனை காலமாய்-என்
நெஞ்சம் நிறைத்த
நினைவுகளை
வார்த்தைகளாய்
வீசி இரைக்கப் போகிறேன்..
வலது கால் வைத்து
வாருங்கள்
வாசலில் கை கூப்பி காத்திருக்கிறேன்..!!
No comments:
Post a Comment